ஹிந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் தி.மு.க எம்.பி ஆ.ராசாவுக்கு பா.ஜ.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள், ஹிந்து முன்னணி, வி.ஹெச்.பி உள்ளிட்ட அமைப்புகள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கடையடைப்பு, போராட்டங்கள் தமிழகமெங்கும் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், கோவையில் ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணி இயக்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க கோவை மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி, வன்முறையை தூண்டும் வகையில் மிரட்டல் தொனியில் பேசினார் என கூறி தி.மு.கவினர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதனையடுத்து, அவசர அவசரமாக செயல்பட்ட தி.மு.க அரசின் காவல்துறையினர், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதனை கண்டித்துள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “தொடர்ச்சியாக ஹிந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வரும் தி.மு.க எம்.பி ராசாவை இந்த திறனற்ற தி.மு.க அரசு கண்டிக்கவும் இல்லை, கைது செய்யவும் இல்லை. வெறுப்பை உமிழும் ராசாவை கண்டித்ததற்காக, உத்தம ராமசாமியை கைது செய்ததை தமிழக பா.ஜ.க வன்மையாக கண்டிக்கிறது. மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி வரும் ராசாவை கைது செய்யாமல், தி.மு.கவின் இரண்டாம் கட்ட பேச்சாளர்களை மிஞ்சிய அவரது இழிவான பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த தமிழக பா.ஜ.க மாவட்ட தலைவரைக் கைது செய்தது ஏன்? உங்கள் அடக்குமுறைகளுக்கு நாங்கள் என்றும் அஞ்சமாட்டோம், உங்களது சர்வாதிகாரத்தனத்திற்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்” என தெரிவித்தார்.