பா.ஜ.க உண்ணாவிரத போராட்டம்

மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை இருமுறை குறைத்தும் தமிழக அரசு தனது வரிகளை குறைக்க தொடர்ந்து மறுத்து வருகிறது. தமிழகத்தில், சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., சார்பில், ‘பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமத் தொகை, சமையல் காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் தரப்படும்’ என, பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆனால், இதையெல்லாம் சொல்லி ஆட்சியை பிடித்து ஓராண்டிற்கு மேலாகியும், பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தட்டிக்கழித்து வருகிறது தி.மு.க அரசு. ஒருசில பெயரளவில் மட்டுமே துவக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவும் முக்கியமாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவும் வலியுறுத்தி, தமிழக பா.ஜ.க சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில், அக்கட்சியின் அமைப்பு ரீதியாக உள்ள, மாவட்ட தலைநகரங்களில் நேற்று பா.ஜ.கவினர் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். சென்னை, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்ற போராட்டத்தில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். இதேபோல பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற போராட்டங்களில் பா.ஜ.கவின் முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர். ஏராளமான தொண்டர்களும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர்.