பிர்பும் கலவர வழக்கு

மேற்கு வங்கம் பிர்பும் கொலை வழக்கில் தொடர்புடைய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நான்கு பேரை சி.பி.ஐ மும்பையில் கைது செய்துள்ளது. இது குறித்து சி.பி.ஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “பிர்பும் அருகே கொலை நடந்த உடனேயே குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரும் போக்டுயில் இருந்து மும்பைக்குத் தப்பி ஓடிவிட்டனர். மறைவிடத்தில் பதுங்கி இருந்த அவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேரில் பாப்பா, ஷாபு ஷேக் ஆகிய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்பு மேற்கு வங்கத்திற்கு அழைத்து சென்று காவலில் வைக்க மனு செய்யப்படும்” என்றார். மேற்கு வங்க மாநிலம் பிர்பும் அருகே ஆளுங்கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்து துணைத் தலைவர் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, திருணமூல் கட்சித் தொண்டர்கள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரை கடுமையாகத் தாக்கி எரித்துக் கொன்றனர். இந்தச் சம்பவம் தேசம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதில் 21 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.