கொள்ளை நோய், பெருவாரி காய்ச்சல், விச சுரம், கொடிய விச சுரம் என்ற பெயர்களில் வழங்கப்படும் நோய், அதன் சிகிச்சை முறைகள் என பலவற்றையும் நம் பாரம்பரிய மருத்துவ நூல்களில் கூறக் காணலாம். வாத சுரம், பித்த சுரம், கப சுரம், அசீரண சுரம், மோதல் சுரம், மாறல் சுரம், பூத சுரம் போன்ற குறிப்பிட்ட மாதிரி குறிகுணங்களை உடைய சுரங்கள், ‘சுத்த சுரம்’ என்ற வார்த்தையால் விவரிக்கப்படுகின்றன. ‘விசம சுரம்’ என்று சொல்லப்படுவது, மேற்கூறிய வகைகளில் அடங்காது. ஒவ்வொரு காலங்களிலும் புதுப்புது குறிகுணங்களால் விவரிக்கப்படும் சுரங்களே, சமமல்லாத விசம சுரம். இந்த அடிப்படையில், ஒவ்வொரு காலங்களிலும் புதுப்புது சுரங்கள் தோன்றி பலரையும் பலிவாங்கி பின் அடங்குவதைக் கண்டு வருகிறோம். இதுபோல வரும் சுரங்களை வேறுபடுத்தி சிகிச்சை முறைகளை நம் முன்னோர்கள் பல தலைமுறைகளுக்கு முன் எழுதி வைத்துள்ளார்கள்.
அவர்கள் கூறுவதில் முக்கியமான மருந்து வேப்பிலை. வேப்பிலை பற்றிய, “அகத்தியர் குணவாகடம்” என்ற நூல், கிருமி, குட்டம், மாந்தம், கெடு விட சுரங்கள் என்று கூறுகிறது. வேப்பிலையுடன் சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து சாறு எடுத்து, வாரம் ஒருநாள் 10 மிலி முதல் 50 மிலி அளவு வரையில், குழந்தை முதல் பெரியவர்கள்வரை கொடுத்துவரும் பழக்கம் தமிழ்நாட்டின் பல கிராமங்களிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. அது கசப்பதில்லை. வேப்பிலை, சின்ன வெங்காயம் கஷாயமும் அதேபோல பயன் தருவது. வேப்பிலை, சின்ன வெங்காயம், வெற்றிலை மூன்றும் தலா ஒரு கைப்பிடியுடன் 10 மிளகு சேர்த்து, 400 மிலி தண்ணீரில் காய்ச்சி கால்பாகமாக வற்ற வைத்து, 50 மிலி வீதம் தினம் நான்கு வேளை வீதம் சாப்பிட, கொடிய விஷஜுரங்கள், அதை தொடர்ந்து வரும் இருமல், உடல் தளர்வு அனைத்தும் 1 வாரத்திற்குள் சரியாகி முழு பலம் பெறுவதை காணமுடியும். இதை இரண்டு வேளை தயாரித்து, ஆறு மணிநேர இடைவெளியில் அருந்த வேண்டும்.
ஒத்தடம் (இது உயிர் காப்பது): விச சுர சன்னிக்கு:
கருங்கல் பாறை தூள் (எம் சேன்ட்) 1 டம்ளர் எடுத்து, சட்டியில் வறுத்து தாங்குகின்ற சூட்டில் நெஞ்சு, விலா, இடுப்பு, முதுகு இடை போன்ற இடங்களில் தந்தால், சளி, இருமல், மூச்சடைப்பு, வேக சுவாசம், உடல் வலி போன்றவை படிப்படியாக சரியாகி விடுகின்றன. தேவைக்குத் தகுந்தவாறு ஒரு மணிநேரம் முதல் சில மணிநேரங்கள் வரை தரப்படவேண்டும். 200 மிலி பசும்பாலில் 1 முதல் 1 1/2 கிராம் படிகாரத்தை பொடித்து போட்டு பாலை காய்ச்சினால் பால் முறிந்து விடும். வடிகட்டிய பாலில் தெளிவு நீர் கிடைக்கும். அதை 60 மிலி வீதம் 3 வேளை பகலிலும், அதேபோல இரவில் காய்ச்சி 3 வேளை இரவிலும் கொடுத்துவர விஷஜுரம் பாதித்த பல உறுப்புகளும் சரியாகிவிடும்.
இவை தவிர, வேப்பம்பட்டை சார்ந்த குடிநீரும் குறிப்பிடப்பட்டுள்ளது. இஞ்சி சாறு + எலுமிச்சை சாறு + தேன் சரசம் செய்து (லேசாக சூடு செய்து) பருக வேண்டும். இதனால் பசியும் ருசியும் ஏற்படும். சோர்வு நீங்கும்.அதே போல, தொண்டை புண் ஆற, வறட்டு இருமல் குறைய, தோல் சீவிய இஞ்சியை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி (பட்டாணி அளவில்), உப்பில் ஊற வைத்து சாப்பிட வேண்டும்.
கட்டுரையாளர்: சித்த மருத்துவர், திருநெல்வேலி