கோவை, ‘கொடிசியா’ கண்காட்சி அரங்கில் தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலமுக்கிய பிரமுகர்கள் 415 பேர் பங்கேற்ற நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் உரையாற்றினார். அப்போது, உலக நாடுகளில் வித்தியாசமானது நம் தேசம். நம் முன்னோர் ஏராளமான நல்ல விஷயங்களை நமக்கு பொக்கிஷமாக தந்து சென்றுள்ளனர். பல வேறுபாடுகள் இருந்தாலும், நம் நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னணியில் விளங்கியது. தேசம் உன்னத நிலையை அடைய, தனிமனித நிர்மாணம் மட்டுமே சரியான தீர்வு என்பதை உணர்ந்து, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தோற்றுவித்தார் கேசவ பலிராம் ஹெட்கேவர். தினமும் ஒரு மணி நேர பண்புப் பயிற்சி வாயிலாக, தனிமனித நிர்மாணம் மேம்பட்டு, தேசத்தின் புனர்நிர்மாணம் போன்ற இலக்குகளை அடைய ஆர்.எஸ்.எஸ் இயக்கங்கள், தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைய, வேறு எந்த நடைமுறைகளும் தேவையில்லை. உங்கள் அனைவரையும் நம் தேசப்பணியில் இணைய அழைப்பு விடுக்கிறேன். உலக நாடுகளுக்கு எல்லாம், வேறு நாடுகளை கைப்பற்றுவதில் தான் ஆர்வம் இருந்தது. ஆனால், உலகையே குடும்பமாக கருதும் ‘வசுதைவ குடும்பகம்’ எனும் சிந்தனையால், உலக நாடுகளுக்கு குருவாக பாரதம் விளங்கி வந்தது. மீண்டும் அந்நிலையை அடைய ஆர்.எஸ்.எஸ் பணியாற்றி வருகிறது என கூறினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மேகலாய_ஆளுநர் வி. சண்முகநாதன் எழுதிய ‘மண்ணில் விளைந்த மகத்தான சிந்தனை’ எனும் நூலை மோகன் பாகவத் வெளியிட்டார். முதல் பிரதியை ஆர்.வி.எஸ் கல்வி அறக்கட்டளையின் கே.என் குப்புசாமி பெற்றுக்கொண்டார். இதில் ஆர்.எஸ்.எஸ் தென்பாரதத் தலைவர் வன்னியராஜன், தென் தமிழக தலைவர் ஆடலரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.