தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்கள்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் பி.ஆர்.ஏ.பி ஐந்தாவது பதிப்பான வணிக சீர்திருத்த செயல் திட்டம் 2020ன் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மதிப்பீட்டை அறிவித்தார். அதன்படி, வணிகச் சீர்திருத்த செயல்திட்டத்தின் அடிப்படையில் ஆந்திரப் பிரதேசம், குஜராத், ஹரியானா, கர்நாடகா, பஞ்சாப், தமிழகம், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் முதலிடத்தில் உள்ளன. ஹிமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரகாண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை சாதனையாளர்கள் பிரிவின் கீழ் வருகின்றன. அசாம், சத்தீஸ்கர், கோவா, ஜார்க்கண்ட், கேரளா, ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகியவை ஆஸ்பயர்ஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளன. டெல்லி, ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, புதுச்சேரி, திரிபுரா ஆகியவை வளர்ந்து வரும் வணிக சுற்றுச்சூழல் அமைப்புகளின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், டி.பி.ஐ.ஐ.டி செயலாளர் அனுராக் ஜெயின் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் முன்னிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. திட்டத்தின் பரந்த நோக்கம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பது, வணிக நட்பு சூழ்நிலையை வளர்ப்பது, நாடு முழுவதும் வணிகம் செய்வதை எளிதாக்குவது, செயல்படுத்துவதில் மாநிலங்களின் செயல்திறன் அகியவை இந்த மதிப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி வணிக சீர்திருத்த செயல் திட்டத்தை நடைமுறை படுத்துவதே இதன் நோக்கம். பி.ஆர்.ஏ.பி 2020, தகவல் அணுகல், ஒற்றைச் சாளர அமைப்பு, தொழிலாளர், சுற்றுச்சூழல், நில நிர்வாகம் போன்ற 15 வணிக ஒழுங்குமுறை பகுதிகளை உள்ளடக்கிய 301 சீர்திருத்த புள்ளிகளை உள்ளடக்கியது. இந்த சீர்திருத்த செயல்முறையை மேலும் அதிகரிக்க, வர்த்தக உரிமம், சுகாதாரம், சட்ட அளவியல், போன்ற 118 புதிய சீர்திருத்தங்கள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளன.