மகத்தான விஸ்வகர்மா திட்டத்தை குலத்தொழில் கல்வி என்று சிறுமைப்படுத்தி குறுக்குசால் ஓட்டும் குறு மதியாளர்களை வன்மையாக கண்டிப்பதாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விடுத்துள்ள பத்திரிகைச் செய்தியில், “விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு, பாரம்பரிய கைவினைக் கலைஞர்களின் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில், ரூ. 13,000 கோடி ஒதுக்கீட்டில் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை தொடங்கி வைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறன். சுயதொழில் செய்யும் அனைவரும் சுயமரியாதையுடன் முன்னேறவும், கிராமப்புற மற்றும் நகர்ப்புற பாரம்பரிய கைவினை தொழிலாளர்களின் நலன் கருதி தொடங்கப்பட்டதுதான் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்.
* கருவிகள் வாங்க – ₹15,000 மானியம்
* பயிற்சி நாட்களில் தினசரி ₹500 உதவித்தொகை
* 5% வட்டியில் முதல் தவணையாக ₹1.0 லட்சமும், இரண்டாம் தவணையாக ₹2.0 லட்சமும் வழங்கப்படும்.
தச்சர்கள், பொற்கொல்லர்கள், சலவைத் தொழிலாளர்கள், கொத்தனார்கள், சிகை திருத்தும் தொழிலாளர்கள் உள்ளிட்ட 18 வகையான பாரம்பரிய கைவினை வர்த்தக தொழிலாளர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள். இந்த மகத்தான திட்டத்தை பாராட்ட மனமில்லாமல் குலத்தொழில் கல்வி என்று சிறுமைப்படுத்தி குறுக்குசால் ஓட்டும் குறு மதியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.