டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், “தற்போது நடைபெற்று வரும் 75 நாள் கடற்கரை தூய்மை இயக்கம் சமூகத்தின் அனைத்து தரப்பினரின் மகத்தான வரவேற்பை பெற்றுள்ளது. இந்த இயக்கத்தில் ஆளுநர்கள், முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், பிரமுகர்கள், திரைப்படத் துறையினர், விளையாட்டு வீரர்கள், சமூக சேவைக் குழுக்கள் ஆர்வத்தோடு பங்கேற்றுள்ளனர். உலகிலேயே நீண்ட கடற்கரையைக் கொண்ட பாரதத்தில் ‘தூய்மையான கடல் பாதுகாப்பான கடல்’ என்ற மையப் பொருளுடன் மத்திய அமைச்சகங்கள், துறைகள், கடற்கரை பகுதியில் உள்ள மாநில அரசுகள், ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மத்திய புவிஅறிவியல் அமைச்சகம் இந்த இயக்கத்தை நடத்துகிறது. சர்வதேச கடற்கரை தூய்மை தினம் செப்டம்பர் 17 அன்று கடைப்பிடிக்கப்படும் நிலையில், அந்நாளில் நான் மகாராஷ்ட்ராவின் ஜூஹூ கடற்கரை தூய்மை இயக்கத்தில் ஆளுநர் பகத் சிங் கோஷியாரி, துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ஆகியோருடன் கலந்து கொள்கிறேன். தமிழகத்தின் சென்னை கடற்கரை தூய்மை இயக்கத்தில் செப்டம்பர் 17 அன்று மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பங்கு பெறுகிறார். புதுச்சேரி கடற்கரையில் தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்கிறார். கடற்கரையோர மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த இயக்கத்திற்கு முழு ஆதரவு தருவதாக உறுதியளித்துள்ளனர்” என்று கூறினார். மேலும், கடற்கரையோரமாக உள்ள ஒடிசா, மேற்கு வங்கம், கோவா, குஜராத், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பங்கேற்கும் மத்திய அமைச்சர்களின் விவரங்கள் பற்றியும் அமைச்சர் எடுத்துரைத்தார்.