பார் போற்றும் பாரதத் திறமை

பிரபல டுவிட்டர் சமூக வலைதளத்தின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜாக் டோர்சி தனது தலைமை செயல் அதிகாரி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருந்த பரக் அகர்வால், புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பாரதத்தை பூர்வீகமாக கொண்ட பரக் அகர்வால், மும்பை ஐ.ஐ.டி யில் படித்து, அமெரிக்காவில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியை முடித்தவர். 37 வயதான பரக் அகர்வால், உலகின் முன்னணி 500 நிறுவனங்களின்  தலைமை செயல் அதிகாரிகளில் இளமையானவர்.

டுவிட்டருடன் சேர்த்து உலகின் பல மாபெரும் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட பெரிய பொறுப்புகளில் பாரத தேசத்தவர்களே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ சத்ய நாதெள்ளா, கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, ஐ.பி.எம் சி.இ.ஓ அர்விந்த் கிருஷ்ணா, அடோப் சி.இ.ஓ சாந்தனு நாராயண், வி.எம் வேர் சி.இ.ஓ ரங்கராஜன் ரகுராம், பெப்சிகோ இந்திரா நூரி என இதற்கு பல உதாரணங்களை சொல்லமுடியும். இதைத்தவிர, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நாடுகளில் 200 பாரத வம்சாவளியினர் அரசியல்வாதி, அரசுப்பணி, வங்கி உள்ளிட்ட துறைகளில் உயர்பதவிகளை வகித்து வருகின்றனர். இதில் 60 சதவீதம் பேர் கேபினட் அந்தஸ்து பெற்றவர்கள்.