பாரதத்தில் விளையும் வாழைப்பழம் மற்றும் இளம் சோளத்திற்கான (பேபி கார்ன்) சந்தை அணுகல் குறித்து பாரதம் மற்றும் கனடாவின் தேசிய தாவர பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் மூலம் இப்பொருட்களுக்கான கனடிய சந்தைக்கு அவற்றை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு நமது நாட்டிற்கு கிடைத்துள்ளது. வாழைப்பழம் குறித்து பாரதம் வழங்கிய தொழில்நுட்பத் தகவல்களின் அடிப்படையில், அதை உடனடியாக ஏற்றுமதி செய்வதற்கு கனடா ஒப்புதல் அளித்துள்ளது. கனடா அரசின் இந்த முடிவு, இவற்றை பயிரிடும் நமது விவசாயிகளுக்குப் பெரிதும் பயனளிக்கும். தேசத்தின் ஏற்றுமதி வருவாயையும் அதிகரிக்கும். வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர் மனோஜ் அஹுஜா மற்றும் கனடா தூதர் கேமரூன் மெக்கே ஆகியோருக்கிடையே நடைபெற்ற சந்திப்பில் இவற்றின் ஏற்றுமதியை 2022 ஏப்ரல் முதல் தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.