ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள கோயில் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள ஹனுமான் சிலையில் உருது மொழியில் எழுதப்பட்ட சீட்டு ஒட்டப்பட்டுள்ளது. இந்த சீட்டில் 786 என்றும் எழுதப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தையடுத்து, அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், குற்றவாளிகளை பிடிக்க காவல்துறைக்கு 24 மணி நேர கெடு விதித்தனர். இந்த காலக்கெடுவுக்குள் கைது செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளனர். இந்தச் செயலின் பின்னணியில் மதப் பதற்றத்தைத் தூண்டும் சதி இருப்பதாக காவல்துறை சந்தேகிக்கிறது. இவ்வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.