புதிய நாடாளுமன்ற கட்டிட வளாகத்தின் கட்டுமானத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் அண்மையில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.என்.படேல், ஜோதிசிங் அமர்வு கட்டுமானப்பணிகளைத் தொடர அனுமதி அளித்து வழக்கைத்தள்ளுபடி செய்ததோடு வழக்கு தொடர்ந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தர விட்டது. இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடம் தொடர்பாக ‘ஆர்கனைசர்’ ஆங்கில வார இதழில் திரு. ராம் மாதவ் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம் வாசகர்களுக்கு தரப்படுகிறது.
‘இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது காங்கிரஸ், இன்றைய காங்கிரஸ் பிரமுகர்களின் கொள்ளுத் தாத்தா நேருதான் 1947 ஆகஸ்ட் 15 அன்று நள்ளிரவில் சுதந்திர தின உரை நிகழ்த்தினார். நிகழ்த்திய இடம் நாடாளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபம். இந்த வம்ச காவியம் அப்படியே நீடிக்க வேண்டும் என்பதுதான் காங்கிரசின் ஆசை. ஒரு மோடி வந்து அந்த ஆசையில் மண் அள்ளி போட்டால் எப்படி? சென்ட்ரல் விஸ்டா திட்டம் (புதிய நாடாளுமன்ற வளாக நிர்மாண திட்டம்) காங்கிரசிற்கு வயிற்றெரிச்சலாக இருக்கிறது என்றால் ஆச்சரியமில்லை. கொரோனா காலகட்டத்தில் புதிய நாடாளுமன்றம் கட்டுவது எதற்கு என்றெல்லாம் பேசுவது வெறும் வாய் வீச்சு. இந்தியாவின் அரசியல் சூழல் நேரு மயமாக காங்கிரஸ் மயமாக, நீடிக்காமல் போய்விடுமோ என்று பதறுகிறார்கள் காங்கிரஸ் புள்ளிகள்.
சுதந்திரம் அடைந்த புதிதில் இருந்தேகாங்கிரஸ் நூற்றுக்கணக்கான உள்கட்டமைப்பு கட்டுமானங்கள், ஸ்தாபனங்கள், அணைகள், விமான நிலையங்கள் – ஏன், உயிரியல் பூங்காக்கள் கூட – நேரு இந்திரா வம்சத்தார் பெயரில் இருக்கும்படி பார்த்துக் கொண்டது. புதிய நாடாளுமன்ற வளாகத்திலும் தங்கள் வம்சத்தின் முத்திரை இருக்கவேண்டும் என்ற எண்ணம்தான் அவர்கள் முணுமுணுக்கக் காரணம். மோடியின் திட்டம் என்ன? 2022ல் பாரதம் சுதந்திரம் அடைந்ததன் 75வது ஆண்டுத் திருவிழா வருகிறது. வரலாற்றின் அந்த கம்பீரமான காலகட்டத்தில், புதிய நாடாளுமன்ற வளாக மையப்பகுதி தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட வேண்டும் என்பதுதான் கட்டுமானம் இப்போது தொடங்கி யிருப்பதற்கான காரணம்.
மொத்த வளாக கட்டுமானம் நிறைவடைய இன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள் பிடிக்கும். கட்டுமானப் பணிகள் எல்லா மாநிலங்களிலும் ஊரடங்கு விதிமுறைகளில் இருந்து விலக்கு பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கிற்கு முன்பாக தொடங்கிய இந்த திட்டத்தில் வேலை செய்யும் அலுவலர்கள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு பணி வாய்ப்பு கிடைக்கிறது என்பது மட்டுமல்ல அவர்கள் கடந்தாண்டைப் போல மிகுந்த சிரமப்பட்டுசொந்த ஊருக்கு புறப்பட்டு போகும் அவலத்தையும் தவிர்க்கலாம் என்பதால் கட்டுமானம் தொடர்கிறது.
கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு, 1,500 தொழிலாளர்கள் இந்தத் திட்டத்தில் வேலை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ, காங்கிரஸ் ஆளும் மகாராஷ்டிர அரசு 900 கோடி ரூபாய் செலவில் மும்பையில் எம்எல்ஏ ஹாஸ்டல் புதுப்பிப்பு திட்டத்திற்கு டெண்டர் கோருகிறது. காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் அரசோ புதிய ராய்ப்பூர் என்று ஒரு திட்டத்தை வைத்துக் கொண்டு கவர்னர் மாளிகை, எம்எல்ஏ விடுதி போன்றவற்றை கட்டுவதற்கு முயற்சி செய்தது. பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, சோனியா காந்திக்கு கடிதம் எழுதி ”உங்கள் உபதேசம் எல்லாம் ஊருக்குத் தானா?” என்று கேள்வி எழுப்பிய பிறகு அந்த மாநில அரசு அந்தத் திட்டத்தை கைவிட்டது நினைவுகூரத்தக்கது.
மொத்தம் 13,500 கோடி ரூபாய் செலவிலான புதிய நாடாளுமன்ற கட்டுமான திட்டத்திற்கு மத்திய பசுமை வாரியம் அனுமதி அளித்துள்ளது. இந்தச் செலவில் தடுப்பூசி போடலாமே என்ற விதண்டா வாதம் அடிபட்டு போய்விடுகிறது; காரணம் தடுப்பூசி இயக்கத்திற்கு பாரத அரசு 35,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதுடன், போர்க்கால ரீதியில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன.இந்த சூழ்நிலையில் மோடியைக் குறிவைத்து ராகுல் காந்தி, புதிய நாடாளுமன்ற கட்டுமானத்தை “தண்டச் செலவு”, “கண்ணை மறைக்கும் ஆணவம்”, “பிரதமரின் ஈகோ” என்றெல்லாம் வசவுகளை வீசுகிறார்; அஸ்தமித்துக் கொண்டிருக்கும் ஒரு தலைவர் மனதில் பொங்குகிற பொறாமையைத் தான் இந்த ஏச்சுக்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. திரும்பத் திரும்ப எதிர்க்கட்சி பிரமுகர்கள் “மோடிக்கு வீடு” என்று கேலி பேசுவது அவர்களுடைய ‘அற்பத்தனத்தை’ தான் காட்டுகிறது. புதிய நாடாளுமன்ற வளாக மையப்பகுதி கட்டுமானம் 2024ல் நிறைவடையும்.
அதற்குள் அடுத்த நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும். எதிர்க்கட்சிகளின் பதை பதைப்பைப் பார்க்கும்போது, 2024 கடந்த பிறகு எதிர்காலமே இல்லை என்று அவர்களுக்கு தோன்றிவிட்டது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது 2029க்குப்பிறகுதான். ஏனென்றால் 2026ல் தான் லோக்சபா தொகுதிகள் மறுசீரமைப்பு நடைபெற வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதா என்று எதிர்க்கட்சிகள் மிரள்வதை பார்த்தால் 2029ல் கூட அவர்களுக்கு வெற்றியில் நம்பிக்கை இல்லை என்றுதான் ஆகிறது.புதிய நாடாளுமன்ற வளாகம் காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஆத்ம நிர்பர் பாரதத்தின் அற்புத முத்திரையும் கூட.
கட்டுரையாளர்: அகில பாரத செயற்குழு உறுப்பினர், ஆர்.எஸ்.எஸ்