மணி மகுடத்தில் மற்றொரு வைரம்

ஐ.நா.வின் சர்வதேச சட்ட ஆணையம் 1947ல் உருவாக்கப்பட்டது. சர்வதேச சட்டங்கள், விதிகளை மேம்படுத்த பரிந்துரை வழங்குவதும், ஊக்குவிப்பதும் இதன் முக்கிய பணி. ஐ.நா.வின் சர்வதேச சட்ட ஆணையத்தின் உறுப்பினர் பதவிக்கு பாரதத்தின் ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தரும், பாரத தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழுவின் உறுப்பினருமான பிமல் படேல் தேர்வாகி உள்ளார். இதற்கு முன்பாக ஐ.நா.வின் இளைஞர்கள் மற்றும் ரசாயன ஆயுதங்கள் தடை அமைப்பில் 15 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளார் பிமல் படேல். ஐ.நா.வின் மொத்தமுள்ள 192 உறுப்பினர் நாடுகள் வாக்களித்த இத்தேர்தலில், கடும் போட்டிக்கு இடையே, இவர் 163 வாக்குகளைப் பெற்று தேர்வானார். இவர் அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். இவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள். ஆசியா பசிபிக் பகுதியில் தென் சீன கடல் உள்ளிட்ட பகுதிகளில் சீனா சட்ட விரோதமாக ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் நிலையில், சர்வதேச சட்ட ஆணையத்துக்கு பிமல் படேல் தேர்வாகி இருப்பது, பாரதத்திற்கு பலம் சேர்க்கும். பிமல் படேல் தேர்வுக்கு ஐ.நா.வுக்கான பாரதத்தின் நிரந்தர தூதர் டி.எஸ் திருமூர்த்தி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.