நடந்து முடிந்த நகராட்சித் தேர்தலில் பா.ஜ.க கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது. வாக்கு வங்கியில் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இது தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையல்ல. இந்நிலையில், இதுதொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், முன்னாள் மாநில தலைவர்கள், இந்தக் கமலாலயத்தில் யாரெல்லாம் இருந்தார்களோ அவர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருடைய உழைப்பும் தான் இந்த வளர்ச்சிக்கு அடிப்படை காரணம். நான் கட்சி தலைவராக இருக்கும் வரை என் உயிரை கொடுத்தாவது இந்த கட்சியை வளர்ப்பதே என் முதல் கடமை. நான் ஒரு சாதாரண தொண்டன். ஊரில் என்னுடைய ஆட்டையும் மாட்டையும் பார்க்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். என் கவலை எல்லாம் இப்போது அங்கே தான் இருக்கிறது. ஆளுநர் அலுவலகம், அமைச்சர் அலுவலகத்தில் எல்லாம் எனக்கு உட்காரத் தெரியாது. இந்த பொறுப்பிலிருந்து வேலையை முடித்துக் கொடுத்துவிட்டு, மீண்டும் போய் விவசாயம் செய்வதை பாக்கியமாக கருதுகிறேன்’ என கூறினார்.