அராஜக வெற்றி

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 144 இடங்களில் 134 இடங்களை திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றி ஆட்சியைக் கைப்பற்றியது. அக்கட்சியின் வெற்றி என்பது அராஜகம், வன்முறை, வாக்குச்சாவடி மோசடி, எதிர்க்கட்சித் தலைவர்களை துன்புறுத்துதல், வாக்குப்பதிவு முறைகேடுகள் என பல முறைகேடுகளால் பெறப்பட்ட வெற்றி என்பதுதான் உண்மை. அமைதியான தேர்தலை நடத்துவதில் மமதாவின் கையில் உள்ள காவல்துறை தவறிவிட்டது. ஐந்து முறை கவுன்சிலராக இருந்த மீனா தேவி புரோகித், ஆளுங்கட்சியின் குண்டர்களால் உடல்ரீதியாக தாக்கப்பட்டார். அவரது ரவிக்கை கிழிக்கப்பட்டது. எதிர்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியின் குடியிருப்பை காவல்துறை அதிகாரிகளும் அதிரடி படையினரும் சுற்றி வளைத்து அவர் வெளியே வரவிடாமல் தடுத்தனர். இப்படி ஒன்றிரண்டு அல்ல இருபதுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள், பா.ஜ.க தலைவர்கள் எவ்வித காரணமும் சொல்லப்படாமல் தடுத்து வைக்கப்பட்டனர். வாக்கு சாவடியில் இருந்த காமிராக்கள் மறைக்கப்பட்டு போட்டியிடும் வார்டு உறுப்பினரின் ஓட்டு உட்பட பலரின் ஓட்டுகள் கள்ள ஓட்டுகளாக போடப்பட்டன. மக்கள் மீது வன்முறை ஏவிவிடப்பட்டது. பா.ஜ.க, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் என அனைத்து எதிர்கட்சிகளும் முறையாக மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளன. ஆனால், தேர்தல் ஆணையம் இதற்கு இதுவரை செவி சாய்க்கவில்லை.