இதர பிற்படுத்தப்பட்ட சமூகமான மோடி சமூகம் குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், குஜராத்தின் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. விதிமுறைகளின்படி, அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. அந்த தண்டனையை எதிர்த்து சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் மேல்முறையீடு செய்தார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு உள்ளிட்டோருடன் சென்று அவர் மேல்முறையீடு செய்தார். இதை கண்டித்துள்ள மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “மேல்முறையீடு செய்ய ராகுல் காந்தி சூரத் செல்கிறார். ராகுல்காந்தி மேல்முறையீட்டிற்காக தானே செல்வது தேவையில்லாத நாடகம். மேல்முறையீடு செய்வதற்கு சம்பந்தப்பட்ட நபர்கள் நேரில் செல்ல வேண்டியம் அவசியம் இல்லை. பொதுவாக, எந்தவொரு குற்றவாளியும் தனிப்பட்ட முறையில் செல்வதில்லை. ராகுல் காந்தி செய்யும் மேல்முறையீடு நீதிமன்றத்தில் அழுத்தம் கொடுக்கும் சிறுபிள்ளைத்தனமான முயற்சியாகும். நீதித் துறையை அச்சுறுத்தும் நோக்கில் அவர்கள் நாடகம் நடத்திக்கொண்டிருக்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது. நாட்டைவிட ஒரு குடும்பம் மேலானது என்று காங்கிரஸ் கட்சி கருதுகிறது” என்று கூறியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ், முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் ஆகியோர் சிறைக்குப் போனபோது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எத்தனை பேர் உடன் சென்றார்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.