ஜமைக்காவில் அம்பேத்கர் சதுக்கம்

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அரசு முறைப் பயணமாக மேற்கிந்தியத் தீவுகள் நாடான ஜமைக்காவுக்கு சென்றர். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிங்ஸ்டனில் உள்ள தேசிய மாவீரர் பூங்காவுக்கு சென்ற ராம்நாத் கோவிந்த், வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர், ஜமைக்காவின் கவர்னர் ஜெனரல் சர் பெடரிக் ஆலன், பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ் ஆகியோரை சந்தித்து பேசினார். ஜமைக்கா பாரதம் இடையே தகவல் தொழில்நுட்பம் தொடர்பான சேவைகள், மருத்துவம், மருந்துத்துறை, கல்வி, விளையாட்டு, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பு தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். ஜமைக்காவில் பாரத வம்சாவளியினர் அதிக அளவில் வாழும் பகுதிக்கு அம்பேத்கர் சதுக்கம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை திறந்து வைத்து பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இரண்டு நாடுகளும் புவியியல் ரீதியாக வெவ்வேறு திசைகளில் இருந்தாலும், அவற்றின் இடையே நல்லுறவு நீடிப்பதாக தெரிவித்தார்.