சீனாவின் புஜோவில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் கமிட்டியின் 44 வது அமர்வின்போது, யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் தெலுங்கானாவில் காகதீயர்களால் கட்டப்பட்ட ருத்ரேஷ்வரா (ராமப்பா) கோயில் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது குஜராத்தில் ஹரப்பன் நகரத்தில் உள்ள தோலவீராவும் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலான இந்த பாரம்பரியச் சின்னக்கள் அறிவிப்பால் பாரதத்தின் உலக பாரம்பரிய சின்னங்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். “இந்த செய்தியால் மகிழ்ச்சி அடைகிறேன். பண்டைய காலகட்டத்தில் தோலவீரா ஒரு முக்கியமான நகரமாக இருந்தது, நமது கடந்த காலத்துடனான மிக முக்கியமான இணைப்புகளில் இதுவும் ஒன்று. வரலாறு, கலாச்சாரம், தொல்பொருள் குறித்த ஆர்வம் உடைய அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு இடம் தோலவீரா”. “குஜராத் முதல்வராக நான் இருந்தபோது, தோலவீராவில் பாரம்பரிய பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்புத் தொடர்பான விஷயங்களில் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. எங்கள் குழு அங்கு சுற்றுலா, உட்கட்டமைப்பை உருவாக்க பணியாற்றியது” என்று அவர் கூறினார். மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.