அனைவரின் பார்வையும் பா.ஜ.க பக்கம்

தமிழக பா.ஜ.கவில் அதிரடி மாற்றங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. கடந்த சில நாட்களாகவே தி.மு.க உள்ளிட்ட பல கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளின் உறவினர்கள் பா.ஜ.கவில் ஐக்கியமாவது தொடர்கதையாக உள்ளது. முன்பெல்லாம் தி.மு.க விட்டால் அ.தி.மு.க என இரண்டு கட்சிகளில் மட்டுமே மாறி மாறி பயணித்த தமிழக அரசியல்வாதிகள், எப்போதாவது அத்தி பூத்தாற்போல காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுக்கு செல்வது வழக்கம். ஆனால், தற்போது பல அரசியல்வாதிகள், நடிகர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள் என பலரும் இந்த இரு கட்சிகளையும் விடுத்து பா.ஜ.கவில் இணைந்து வருகின்றனர். இது தமிழகத்தில் திராவிட மாடல் பொய்த்து வருவதையே காட்டுகிறது. கடந்த வாரம் தி.மு.க எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவாவும், சில மாதங்களுக்கு முன்னர் தி.மு.கவின் முன்னாள் பொதுச்செயலாளரான மறைந்த க. அன்பழகனின் பேரன் அன்புகிரியும் பா.ஜ.கவில் இணைந்துள்ளனர். இந்நிலையில் பா.ம.கவில் இருந்து வெளியேறி தனிக்கட்சி ஆரம்பித்து கடைசியில் தனிச் சின்னம் இல்லாமல் தி.மு.க சின்னத்தில் வெற்றி பெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி தற்போது பா.ஜ.கவில் ஐக்கியமாகியுள்ளார். ‘வேல்முருகனால் எனக்கு, வெளியில் சொல்ல முடியாத துன்பங்கள் ஏற்பட்டன. கடந்த 2018ல் விவகாரத்து செய்து கொள்ளலாம் என வலியுறுத்தினார். விவகாரத்துக்கு சட்டப்படி அவரிடம் இருந்து பிரிந்து வந்து விட்டேன். அவர் என்னை பழிவாங்கும் எண்ணத்தில், தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கிறார். வேல்முருகன் தி.மு.க., கூட்டணியில் எம்.எல்.ஏவாக இருப்பதால் யாரும் எனக்கு உதவ முன் வரவில்லை. என்னை காப்பாற்றிக் கொள்ள, எனக்கு தெரிந்த பா.ஜ.கவினர் வாயிலாக அண்ணாமலையை சந்தித்து பா.ஜ.கவில் இணைந்து விட்டேன். இனி என்னை அவர்கள் காப்பாற்றுவர்’ என கூறியுள்ளார் காயத்ரி.