வழிக்கு வந்தது பஞ்சாப் அரசு

மத்திய அரசு அண்மையில் இயற்றிய 3 வேளாண் சட்டத்திற்கு எதிராக ஒரு பெரும் போராட்டத்தை சில விவசாய அமைப்புகள் துவக்கி நடத்தி வருகின்றன. இன்றுவரை டெல்லியின் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தைத் தடுத்து அமர்ந்துகொண்டு புதிதாக இயற்றிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என்ற தங்களது கோரிக்கையை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.

துவக்கத்தில் வழக்கம்போல் மோதி எதிர்ப்புஒன்றையே தங்களது குறிக்கோளாகக் கொண்டுள்ள ஊடகங்கள் பல இப்போராட்டத்தை ஊதி ஊதி பெரிதாக்கி, ஏதோ நாடு முழுவதும் பற்றி எரிவதைப் போன்றதொரு தோற்றத்தை உருவாக்கின. இதற்கு ஒத்தூதுவதை போல் நீதிமன்றமும் தன் பங்கிற்கு பக்க வாத்தியம் வாசித்தது. நடைபெற்று வரும் போராட்டத்தை விவசாயிகள் போராட்டம் என்று சொல்ல முடியாது. போராட்டத்தில் விவசாயிகளும் கலந்து கொண்டனர். நாடு தழுவிய அளவில் நடைபெற்ற போராட்டமும் அல்ல. நாட்டின் பிறபகுதிகளில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக எங்கும் பெரிய அளவில் போராட்டம் நடைபெறவில்லை.

இங்கொன்றும் அங்கொன்றுமாக அரசியல் கட்சிகள் அவை சார்ந்துள்ள விவசாய அமைப்புகள் சில பெயரளவுக்கு அதாவது அவர்கள் நடத்தும் போராட்டங்கள் தொலைக்காட்சிகளில் சில நிமிடங்கள் வந்துபோகும் அளவிற்கும் நாளிதழ்களில் புகைப்படத்துடன் கூடிய சிலவரி செய்திகள் வந்தால் போதும் ஏன்ற அளவில்தான் நடைபெற்றன. அத்துடன் தங்கள் கடமை முடிந்து விட்டதாகக் கருதி ஒதுங்கிக்கொண்டன.விவசாயிகள் என்ற பெயரில் நடந்துவருகிற போராட்டத்தின் திரைக்கதை வசனம் எழுதி முதலீடு செய்து இயக்குபவர்கள் பஞ்சாப் மாநில அர்த்தியாஸ் என்று அழைக்கப்படுகின்ற இடைத்தரகர்கள்.

நாடு எங்கிலும் பெரும்பாலான வியாபாரங் கள், விளைப்பொருட்கள் ஆகியவை இடைத்தரகர்கள் வாயிலாகவே சந்தையில் விற்பனைக்கும் நுகர்வோருக்கும் வந்த டைகின்றன. இது தவிர்க்க இயலாதது. ஆனால் பஞ்சாபில் இருக்கும் இந்த அர்த்தியாஸ் எனும் இடைத்தரகர்கள் வைத்ததுதான் சட்டம். கடந்த பல வருடங்களாக இந்த இடைத்தரகர்களின் ஆதிக்கம் சாதாரண குறு, சிறு விவசாயிகளை தலைதூக்க விடாமல் செயல்பட்டு வந்துள்ளது.

பஞ்சாபில் கிராமப்புறங்களில் வங்கிகள் தேவையான எண்ணிக்கையில் இல்ல. அதனால் விவசாயிகள் தங்கள் விவசாயத்தொழில் மற்றும் குடும்பதின் அவசரத் தேவைகளுக்கு இந்த இடைத்தரகர்களையே சார்ந்து இருக்கவேண்டியுள்ளது. அவசரத் தேவைகளுக்கு வட்டிக்கு கடன் கொடுத்து வாங்குவதும் இந்த இடைத்தரகர்களே. மேலும் விவசாயத்திற்குத் தேவையான ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளின் விற்பனை மையங்களைத் தொடங்கி மாநிலம் முழுவதும் பல கிளைகளுடன் இடைத்தரகர்கள் நடத்தி வருகின்றனர்.

பஞ்சாபில் இடைத்தரகர்கள் அதிகமானோர் அரசியல் பின்னணி கொண்டவர்கள். காங்கிரஸ் அல்லது அகாலிதளத்தின் ஆதரவாளர்களாக இருப்பவர்கள். பஞ்சாபில் விவசாய விளைபொருட்கள் விற்பனை மண்டி இடைத்தரகர்களின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. மற்ற மாநிலங்களில் பெயரளவுக்கு அரசு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. பஞ்சாபில் சுமார் 47,000 இடைத்தரகர்கள் உள்ளனர். இதில் அரசு அங்கீகாரம் உரிமம் பெற்ற இடைத்தரகர்கள் 28,000 பேர் இருக்கின்றனர். அவர்களின் கீழ் கணக்குகளைப் பராமரித்து வரும் 1,00,000 ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.

மண்டிக்கு வரும் தானியங்களை சுத்தம் செய்து மூட்டைகளில் கட்டி வாகனங்கள் குடோன்களில் ஏற்றி இறக்கும் தொழிலாளர்கள் 10,00,000 பேர் உள்ளனர். இந்த 47,000 இடைத்தரகர்களின் வசம் பஞ்சாபில் மொத்தமுள்ள 55 லட்சம் விவசாயிகளின் பிடியும் சிக்கியுள்ளது. அவர்கள் உற்பத்தி செய்யும் கோதுமை அல்லது நெல் எதிலும் ஒருபிடி அளவு தானியத்தைக்கூட இடைத்தரகர்களுக்குத் தெரியாமல் வேறு எவருக்கும் விற்றுவிட முடியாது. மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் தானியங்களை இந்த மண்டிகளின் வாயிலாகவே விற்பனை செய்ய வேண்டும். அரசாங்கம் ஆண்டுதோறும் குறைந்தபட்ச கொள்முதல் விலையை நிர்ணயம் செய்தாலும் அது பஞ்சாப் ஹரியாணா மண்டிகளில் செல்லுபடி ஆவதில்லை. விளைப்பொருளின் தரம், ஈரப்பதம் ஆகியவற்றை முடிவு செய்பவர்கள் இடைத்தரகர்களே. அவர்களின் முடிவே இறுதியானது.

அவர்கள் குறிப்பிடுகின்ற விலைக்கு விற்றுவிட்டு செல்வதைத் தவிர வேறு வழி அங்குள்ள விவசாயிகளுக்குக் கிடையாது. இது தவிர தரகர்களுக்கு கமிஷன் 2.5% தானியங்கள் சுத்தப்படுத்தி மூட்டைகளில் அடைத்து ஏற்றி இறக்கும் கூலி என அதற்கும் கணிசமான தொகையை கழித்துக் கொள்வார்கள். தரகர்களிடம் கடன் பெற்றிருந்தால் அதற்குண்டான வட்டி, அசலில் ஒரு பங்கு எடுத்துக்கொள்வார்கள். மிச்சம் மீதி இருந்தால் மட்டும் அது விவசாயிக்கு கிடைக்கும். அதையும் உடனடியாகக் கொடுக்க மாட்டார்கள். பொருள் விற்ற பிறகு தருவதாகச் சொல்லி அனுப்புவார்கள்.

அதுவும் பணமாகத் பின்தேதியிட்ட காசோலையாகத் தருவார்கள். அது வங்கிக்குச் சென்று பணமாக விவசாயியின் கைக்கு சென்று சேர்வதற்கு மேலும் சில காலம் பிடிக்கும். கடனை திரும்பிச் செலுத்த முடியாமல் போன விவசாயிகளின் நிலத்தை இடைத்தரகர்கள் எடுத்துக்கொள்வர். 2000 முதல் 2016 வரையிலான காலத்தில் பஞ்சாபில் மட்டும் 16,606 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.ஆனால் விவசாயம் எதுவுமே செய்யாத இடைத்தரகர்கள் தங்கள் வசம் வந்த தானியங்களை இந்திய உணவுக் கழகத்திடம் மத்திய அரசு நிர்ணயம் செய்யும் விலைக்கு விற்று பெரும் ஆதாயமடைந்து வந்தார்கள். ஒரு சாதாரன சிறு விவசாயி தனது விளைப்பொருளைக் கொண்டுபோய் நேரடியாக அரசு கொள்முதல் நிலையத்திலோ அல்லது இந்திய உணவுக் கழகத்திடமோ விற்பனை செய்ய முடியாது என்ற நிலைதான் இதுநாள் வரை அங்கு நிலவி வந்தது. 2010 ஆகஸ்ட் 31 அன்று கொள்முதல் செய்யும் விவசாய விளைப்பொருட்களுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்திட ஓர் ஆணையை பிறப்பித்தது.

ஆனால் அந்த ஆணையை 35 நாட்களில் திரும்பப் பெற்றது. இதற்குப் பின்னால் இருந்து செயல்பட்டது காங்கிரஸ் அல்லது அகாலித்தளதின் ஆதரவாளர்களே என்பதைபஞ்சாப் விவசாயிகள் நன்கு அறிவர். அப்போதைய பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலுக்கு (அகாலி தளம்) அழுத்தம் கொடுத்தும், பிரதமர் மன் மோகன் சிங்கை அடிபணிய வைத்ததும் இந்த இடைத்தரகர்களே. மத்திய மாநில அரசுகளையே மிரட்டி அடிபணிய வைக்கும் அளவிற்கு இடைத்தரகர்களின் கை பஞ்சாபில் ஓங்கி இருந்து வந்திருக்கிறது. இவர்களின் கையை முறித்து இடைத்தரகர்களின் சுரண்டலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திட புதிய வேளாண் சட்டம் வழி செய்கிறது.

கொள்முதல் செய்யும் விளைப் பொருட்களுக்கு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்திட வேண்டும் என்கிற பரிந்துரையை 2010ம் வருடம் லூதியானாவில் உள்ள பஞ்சாப் அக்ரிகல்சர் யூனிவர்சிட்டி தந்துள்ளது. ஆனால் அவைகள் வழக்கம் போல் கிடப்பில் போடப்பட்டது.2018ம் வருடம் விவசாயிகளுக்கு நேரடியாக பணப் பரிமாற்றம் செய்யும் திட்டத்தினை அமுல்படுத்திட வேண்டுமென்று மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை ஒன்றினை மத்திய அரசு அனுப்பியது. 2019ம் வருடம் முதல் பஞ்சாப்பைத் தவிர அனைத்து மாநிலங்களும் அதை செயல்படுத்திட முன்வந்தன. ஆனால் பஞ்சாப் மட்டும் ஏதேதோ காரணங்களைக் கூறி ஒத்திப்போட்டு வந்தது. டெல்லியில் விவசாயிகள் பெரிய போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மத்திய அரசு கொஞ்சம் பின்வாங்கும் என்று பஞ்சாப் முதல்வர் கனவு கண்டார்.

ஆனால் மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்றது. பேச்சுவார்த்தை நடத்தி இத்திட்டத்தை மேலும் சில ஆண்டுகளுக்கு ஒத்தி வைத்திடலாம் என்ற கனவில் பஞ்சாப் மாநில நிதி அமைச்சர் மன் ப்ரீத் சிங் பாதல், மாநில உணவுத் துறை அமைச்சர் பரத் பூஷன் அஷு, பொதுப்பணித் துறை அமைச்சர் விஜய் இந்தர் சிங்கலா,மண்டி வாரியத் தலைவர் லால் சிங், ஆகியோர் சில அதிகாரிகள் மத்திய உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை சென்று சந்தித்தனர். நீண்ட நேரம் அவர்களுடன் பேச்சுவார்தை நடத்திய பியூஷ் கோயல் ”விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் விளைப்பொருட்களுக்கு வங்கியின் வாயிலாகவே பணத்தைத் தந்திட ஒத்துக்கொண்டால் மட்டுமே மத்திய அரசு அதற்குரிய நிதியை அளித்திடும். இல்லையெனில் நிதியுதவி செய்யாது.

மாநில அரசே அதற்குண்டான தொகையைத் தந்து கொள்முதல் செய்து கொள்ளுங்கள்” என்று தடாலடியாக கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர் பஞ்சாப் மந்திரிகள்.பஞ்சாப் அரசு பல்வேறு மானியங்களுக்காக இதுவரை ரூ.90,000 கோடி வங்கிகளில் கடன் வாங்கியுள்ளது. அதைக் குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பி செலுத்தாததால் மேலும் கடன் பெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சரின் பேச்சுக்கு மறுபேச்சு பேசிட முடியாமல் மத்திய அரசின் நேரடி பணப் பரிமாற்றத்தை ஏற்று இவ்வாண்டு முதல் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் பணத்தை நேரிடையாக செலுத்திட ஒத்துக்கொண்டு ஊர் திரும்பினர் பஞ்சாப் அமைச்சர்கள். ஆடுற மாட்டை ஆடி கறக்கணும் பாடுற மாட்டை பாடிக் கறக்கணும் என்ற மத்திய அரசின் அணுகுமுறைக்கு வெற்றி கிடைத்துள்ளது.

-நா.சடகோபன்