ஆப்கானிஸ்தான் துணைத் தலைவர் அம்ருல்லா சலேஹ், தனது சமூக வலைத்தளப் பதிவில், ‘தலிபான் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் ஒன்று பாகிஸ்தானின் சிறப்பு பயங்கரவாத எதிர்ப்பு அமைப்புகளால் வழிநடத்தப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெறுவது ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. அரசுப் படைகள் சீராக செயல்படுகின்றன. தலிபான்கள், பல இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். ஆனால், அவர்களால் நாட்டை ஆள முடியாது. தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பாகிஸ்தான் தலிபான்களை வெளிப்படையாக ஆதரிக்கிறது. இது அண்டை நாடு மீது தாக்குதல் நடத்துவதற்கு சமம். தலிபான்களின் குடும்பங்கள் பாகிஸ்தானில் பாதுகாப்பாக வசிப்பதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சரே கூறியுள்ளார். இறந்த தலிபான்களின் உடல்கள் புதைப்பதற்காக மீண்டும் பாகிஸ்தான் கொண்டு செல்லப்படும் அளவுக்கு அவர்களின் நெருக்கம் தலிபான்களுடன் உள்ளது’ என தெரிவித்தார். முன்னதாக, தலிபான்களிடம் இருந்து இரண்டு மாகாணங்களை அரசுப் படைகள் மீட்டுள்ளன என ஆப்கன் அரசு தெரிவித்துள்ளது.