பெங்களூருவில் இருந்து மங்களூருவுக்கு காரில் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக மங்களூரு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனையடுத்து உதவி ஆணையர் ஹெக்டே தலைமையிலான காவலர்கள் மங்களூரு சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்தவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த காவலர்கள் காரில் சோதனை நடத்தினர். அப்போது காரில் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் செர்கலையை சேர்ந்த அப்துல்லா என்பதும், அவர் பெங்களூருவில் இருந்து மங்களூருவுக்கு காரில் எம்.டி.எம்.ஏ. என்ற விலையுயர்ந்த போதைபொருளை கடத்தி வந்ததும் அவற்றை மக்களுக்கு விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அப்துல்லாவை கைது செய்த காவலர்கள், அவரிடம் இருந்து 17.5 லட்ச ரூபாய் மதிப்பிலான 150 கிராம் எம்.டி.எம்.ஏ., போதைப்பொருள், கார், அலைபேசி ரூ. 1,260 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்துல்லா மீது ஏற்கனவே ஆந்திர மாநிலம் மற்றும் கேரளாவில் கஞ்சா கடத்தியது உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.