ஆடி பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு (அ) பதினெட்டாம் பெருக்கு என பிரத்யேகமாகத் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் பக்தி, கலாசாரம், நன்றி நவிலும் நாள். காவிரி ஆற்றைச் சிறப்பிக்கும் வகையில் தொன்று தொட்டு இந்த விழா தமிழுணர்வுடனும், விமரிசையாகவும் நடத்தப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு நன்னாளில் திருச்சி அம்மா மண்டபம் படித்துறையில் பெருமாளுக்குச் சீதனம் அளிப்பதற்காகப் பட்டுச்சேலை, தாலிக்கயிறு, இதர மங்கலப் பொருட்கள் அனைத்தும் சேர்த்து ஆற்றில் விடுவது வழக்கம்.
கோயில்களுக்குச் சென்று அங்குள்ள நதிக்கரைகளில் நீராடி, காப்பரிசி தயார் செய்து தெய்வங்களுக்குப் படைத்து, பலவித கலவை சாதங்களை உற்றார் உறவினர்களுடன் நதிக்கரையில் அமர்ந்து உட்கொள்வது, விவசாயம் செழிக்கவும் மாங்கல்ய பலம் நீடிக்கவும் விதை விதைப்பதால் விவசாயம் செழித்து வரப்போகும் தை மாதத்தில் நல்லபடியாக அறுவடை செய்ய -சிறப்பாகக் கொண்டாடி வந்த நாள் இது.”இந்தப் புனிதநாளில் எதை நாம் பல்கிப் பெருக வேண்டும் என்று நினைக்கிறோமோ அதை வாங்குவது மிகவும் சிறப்பான பலன்களைத் தரும்,” என்ற நம்பிக்கை உண்டு.
வீட்டில் வறுமை ஏற்படாமல் இருப்பதற்கு அரிசி, பருப்பு, கல் உப்பு, மஞ்சள், சர்க்கரை, தங்கம் முதலியவற்றை இந்த நாளில் வாங்கலாம். இதனால் நம் வீட்டில் என்றும் உணவிற்குப் பஞ்சம் ஏற்படாமல் உணவு தானியங்கள் பல்கிப்பெருகி சுபிட்சம் உண்டாகும் என்பது ஐதீகம்.அந்தக் காலத்தைப் போல் இந்தக் காலத்தில் பல ஆறுகளில் தண்ணீர் இல்லாததால், முக்கிய நதிகளில் அணைகளைத் திறந்துவிட்டு இந்த நாளில் மட்டும் விசேஷ பூஜைகள் செய்யப்படுகின்றன.
ஆனால், தற்போதைய கொரோனா சூழலில் அதைக் கூடச் செய்ய முடியாத காரணத்தால் பலர் வீட்டில் எளிமையாகக் கொண்டாடுகிறார்கள். புதிதாகத் தாலிக்கயிறு மாற்ற விரும்புபவர்கள் இந்நன்னாளில் மாற்றிக் கொள்வது மாங்கல்ய பலத்தைத் தரும். பூஜை அறையை சுத்தம் செய்து வாழை இலை விரித்து அதில் வெற்றிலை, பாக்கு, பூ, பழம், தேங்காய், வாழைப்பழம், மஞ்சள், குங்குமம், முதலிய மங்கலப் பொருட்களை வைத்து, காப்பரிசி படையலிட்டு, பழ வகைகளைப் படைக்க வேண்டும்.
நாவல் பழம் கிடைத்தால் இன்னும் சிறப்பு. புதிய கயிறு மாற்றுபவர்கள் அந்தக் கயிறை இலையில் வைத்து வழிபாடுகள் செய்ய வேண்டும். இவை காவிரி தாயின் முன் செய்தால் பலன் மிகுதி. ஆனால் வீட்டிலேயே செய்வதால் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக்கொண்டு அதில் இரண்டு மூன்று துளசி இலைகள், ஏலக்காய், பச்சை கற்பூரம், மஞ்சள் பொடி கலந்து காவிரித் தாயாக பாவித்து வழிபடலாம். அல்லது வீட்டில் கிணறு இருக்கின்றவர்கள் கிணற்றுக்குப் பக்கத்தில் கிழக்கு பார்த்து அமர்ந்து இந்தப் பூஜையைச் செய்யலாம்.
அன்றைய நாளில் நம்மால் முடிந்த அளவிற்குக் கலவை சாதத்தைத் தயார் செய்து படையல் செய்யலாம். ஐந்துமுக குத்து விளக்கை ஏற்றிக் கொண்டு, பின்னர் நெய் அகல் விளக்கு ஒன்றை இலையில் வைத்து ஏற்றி வழிபடுவது வழக்கம். அதன் பின் குடும்பத்துடன் அனைவரும் ஒன்றாக அமர்ந்து கலவை சாதத்தையும், காப்பரிசி பிரசாதத்தையும் சாப்பிட்டு மகிழ்வார்கள்.ஆடி பதினெட்டாம் நாள் வழிபாட்டைச் செய்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் தங்குதடையின்றி வேண்டியதெல்லாம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தனை யுகங்களாக மனிதப்பிறவியைக் காத்து வருவதும் இதே நம்பிக்கைதான்.
-ஆர்.கிருஷ்ணமூர்த்தி