முருகனின் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் அருகே திருநகரில் வசித்து வருகிறார் குரு. ஜெயசந்திரன். இறைவனைத் தேடி ஆன்மிக பயணம் மேற்கொண்டிருக்கும் ஏழை மக்களுக்கு எளிமையான பாதையை காட்டுவதில் வெற்றி கண்டிருக்கிறார்.
“கல்லிலே சிலை செய்து கொடுக்கும் ஆச்சாரி பரம்பரையைச் சார்ந்தவர்கள் நாங்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லிலே கலைவண்ணம் கண்ட உளிதான் எங்கள் சமூக வாழ்வை வடிவமைக்கும் உன்னதமான ஆயுதம். எங்களை மட்டுமல்ல அறிவு உளியைக் கொண்டு இந்தச் சமூகத்தின் ஆன்மீக பயணத்தை தொடர்ச்சியாக வடிவமைத்து வருவதில் உள்ளபடியே எங்களுக்குப் பெருமை. இது இறைவன் கொடுத்த வரம்.
இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு திருமங்கலம் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக கருப்பசாமி சிலை ஒன்றை செதுக்கி கொண்டிருந்தபோது கருப்பசாமியின் கால் ஒன்று உடைந்து விட்டது. உடனே நாங்கள் வேறு ஒரு கல்லில் செதுக்கலாம் என்று முடிவு செய்தபோது அந்த ஊர்க்காரர்கள் ‘எங்களுக்கு இந்த சிலையே இருக்கட்டும்’ என்று ‘கால் ஒடிந்த கருப்பசாமி’ சிலையை பெற்றுக்கொண்டு பிரதிஷ்டை செய்தார்கள்.
புதுப்பட்டி கிராமத்தில் இன்றும் நொண்டிக் கருப்பசாமி காவல் தெய்வமாக இருந்து காத்து வருகிறார். விழா நாட்களின்போது இரண்டு நாட்களில் இரண்டு லட்சம் பேர் இங்கு கூடி கருப்பசாமியை வழிபடுகிறார்கள். இறைவன், தான் எந்த இடத்தில், எந்த ரூபத்தில் இருந்து அருள் பாலிக்க விரும்புகிறானோ அந்த இடத்தில் அந்த ரூபத்தில் எங்கள் கையில் இருக்கும் உளி மூலமாக உருக் கொள்கிறான்” என்கிறார் குரு.ஜெயச்சந்திரன்.
இப்படி சிலை செய்யும் வம்ச வகையில்தான் இவருக்கு ஆன்மிக பயணம் தொடங்கியது. தமிழின் தேவார, திருவாசகப் பாடல்களை முறையாகப் பாடக் கற்றுக் கொண்டிருக்கிறார். தேவார திருவாசக பாடல்களைப் பாடி குபேரனை அழைக்கும் புதிய வழிபாட்டு பாடல் முறை ஒன்றையும் இவரே வடிவமைத்து இருக்கிறார்.
வெளிநாட்டு தமிழ் நூலகங்களுக்கு தமிழின் ஆகச்சிறந்த நூல்களை வாங்கி அனுப்புவது, அரிதினும் அரிதான தமிழ் புத்தகங்களை பதிப்பிப்பது போன்ற தமிழ் இலக்கியப் பணிகளை செய்து வருகிறார். உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் ஆன்மீகத் தமிழ் கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். ஆன்மிகத்தோடும் தமிழோடும் தொடர்புடைய இடங்களுக்கு சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்து பயணங்கள் மேற்கொள்கிறார்.
“இறையாற்றலோடு இணைந்து பயணிக்கும் போதுதான் நாம் அடையும் எந்த ஒன்றும் நிலைத்து நிற்கும்” என்று சொல்லும் குரு ஜெயச்சந்திரன் எளிய மக்களுக்கு ஆன்மிக வழிகாட்டுவதில் சிகரம் தொட்டிருக்கிறார்.
-ஆதலையூர் சூரியகுமார்