டெல்லியில், பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறையால் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்கள், அரசு சாராத இயக்குநர்கள், பயிலரங்கில் உரையாற்றிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் அரசு சாராத இயக்குநர்கள், பாதுகாப்புத் துறையில் தற்சார்பு பாரதத்தை அடைவதற்கு அரசால் மேற்கொள்ளப்படும் பல்வேறு முன்முயற்சிகளின் சுமூகமான அமலாக்கத்தை உறுதி செய்ய வேண்டும். ரூ. 35,000 கோடி மதிப்புக்கு பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி உட்பட 2025 வாக்கில், பாதுகாப்புத் தளவாட உற்பத்திக்கு பாதுகாப்புத்துறை ரூ.1.75 லட்சம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதில் சுமார் 70 சதவீத பங்களிப்பை பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் செய்யும். பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் உலகளாவிய போட்டியாளராக மாற்றுவதற்கு அரசு சாரா இயக்குநர்கள் தீவிர ஈடுபாடு காட்ட வேண்டும். 2047 வாக்கில் உலகின் முதன்மையான 100 பாதுகாப்பு தொழில் நிறுவனங்களில் 20 இந்திய பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்களை இடம் பெறச் செய்யும் வகையில் அவர்கள் திட்டங்களை வகுக்க வேண்டும். உரிமம் பெறுவதற்கான நடைமுறையை அரசு எளிதாக்கியுள்ளது. பாதுகாப்பு துறைக்கு சிறப்புமிக்க கண்டுபிடிப்புகளை வெளியிடுவதற்கான முன்முயற்சி; பாதுகாப்புத்துறையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை அதிகரிப்பது ஆகியவையும் இதில் அடங்கும்’ என தெரிவித்தார்.