பஞ்சாப்பில் ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் லால் சந்த் கட்டருசக்கை உடனடியாக பதவி நீக்கம் செய்து அவரை கைது செய்ய வேண்டும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ சுக்பால் சிங் கைரா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், “கட்டாருசக் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி வருகிறார். தனக்கு நெருக்கமானவர்களை முக்கியமான பதவிகளில் நியமிக்கிறார். இது சட்டத்தை மீறும் செயல் மட்டுமல்ல, ஆம் ஆத்மி அரசு ஊழல் சித்தாந்தத்திற்கு எதிரானது என்ற உங்களது கூற்றுக்கு மாறானது. உங்கள் கட்சித் தலைவர்கள் தங்களின் அதிகாரப்பூர்வ பதவிகளைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதால், மார்ச் 2022 முதல் உங்கள் அமைச்சர்கள் மற்றும் எம்.எ.ல்ஏக்களால் நியமிக்கப்பட்ட அனைத்து தனிப்பட்ட பணியாளர்கள் குறித்தும் அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். 29.03.2022 தேதியிட்ட உத்தரவின்படி, அமைச்சர் லால் சந்த் கட்டருசக், தனது மகன் ராபின் சிங்கை தனது தொலைபேசி உதவியாளராகவும், அவரது அண்ணியின் மகன் விகாஸ் தேவியாலை சிறப்பு உதவியாளராகவும், அவரது அரசியல் உதவியாளர் சாஹில் சைனியை தனது சமையல்காரராகவும் சட்டவிரோதமாக நியமித்துள்ளார். சாஹில் சைனி உண்மையில் அவரது மிக நெருங்கிய அரசியல் உதவியாளர். அவரது அன்றாட நடவடிக்கைகளை கையாள்கிறார், ஆனால் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சமையல்காரராக நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவிக்கிறார். லக்பீர் சிங் லட்டி என்பவர் மீது என்.டி.பி.எஸ் சட்டத்தின் கீழ் கடுமையான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், டிரக் யூனியனின் டினாநகர் தலைவராக லக்பீர் சிங் லடியை நியமிக்கவும் அமைச்சர் சூழ்ச்சி செய்துள்ளார். அமைச்சர்கள் பொது வாழ்வில் நெறிமுறைகள் மற்றும் ஒழுக்கத்தை நிலைநிறுத்தி முன்மாதிரியாக வழிநடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர், சட்டத்தின் ஆட்சியை உடைத்தது மட்டுமல்லாமல், ஆம் ஆத்மியின் சித்தாந்தம் என்று அழைக்கப்படுவதையும் குப்பையில் போட்டுள்ளார்” என கூறியுள்ளார். இதற்கான சான்றுகளையும் சமர்ப்பித்துள்ளார்.