கர்நாடக மாநிலம் மங்களூருவில் 2022 ஜூலை 26 அன்று தடைசெய்யப்பட்ட முஸ்லிம் பயங்கரவாத அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை (பி.எப்.ஐ) சேர்ந்த பயங்கரவாதிகளால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட பாரதிய ஜனதா இளைஞர் அணியின் மாவட்டத் தலைவர் பிரவின் குமார் நெட்டாருவின் மனைவி நூதன குமாரிக்கு முந்தைய பா.ஜ.க அரசு சமீபத்தில் ஒப்பந்த அடிப்படையில் குரூப் சி பிரிவில் பணி வழங்கியது. ஆனால், தற்போது, கர்நாடகாவில் தற்போது புதிதாக அமைந்த காங்கிரஸ் அரசு, அந்த தற்காலிக பணி உத்தரவை வாபஸ் பெற்றது. இது அங்கு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சூழலில், “புதிய அரசு வந்த பிறகு, கடந்த அரசால் நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்களை அரசுப் பணியில் இருந்து நீக்குவது இயல்பான செயல். பிரவீன் நெட்டாருவின் மனைவி மட்டுமல்லாது 150க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஏற்கனவே பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதில் அரசின் தலையீடு எதுவும் இல்லை” என முதல்வர் சித்தராமையா டுவீட் செய்திருந்தார். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவரின் மனைவி என்ற குறைந்தபட்ச கருணையோடு கூடிய சிறப்பு கவனம் கூட நூதன குமாரிக்கு காங்கிரஸ் அரசால் வழங்கப்படவில்லை என விமர்சிக்கப்பட்டது. இந்த முடிவுக்கு பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், பல்வேறு ஹிந்து அமைப்புகள், பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்ததையடுத்து, காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டில் இருந்து தற்போது சற்றே பின்வாங்கியுள்ளதாகத் தெரிகிறது. “இதை ஒரு சிறப்பு வழக்காகக் கருதி, மனிதாபிமானத்தின் அடிப்படையில் நூதன குமாரி மீண்டும் பணியில் நியமிக்கப்படுவார்” என்று முதல்வர் சித்தராமையா டுவீட் செய்துள்ளார்.