திருப்பாவை – 24

அன்று இவ் வுலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென் இலங்கைச் செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலாய் எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் சேவகமே ஏற்றிப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்!
விளகக்ம்
அருச்சுனன் சொன்ன இடத்திலெல்லாம் தேரை நிறுத்திய கீதைநாயகன்.., கோபியர் சொன்னதனால் பள்ளியறையிலிருந்து எழுந்து, நப்பின்னை மங்களா சாசனம் பாடித் தொடர்ந்திட, சிங்காசனத்து அளவும், அழகு நடை பயின்று சென்றான்.
கோபியர் கூட்டம் அவனைக் கண்டு நேருக்கு நேர் பேசிடும் வரையில், இங்ஞனம் வர வேண்டும், எழுந்து அருளி இருக்க`வேணும், இது வேணும், அது வேணும் என்றெல்லாம் மனதில் எண்ணிக் கொண்டிருந்தவர்கள், அவனுடைய திவ்யமான நடையைப் பார்த்து, இவனுடைய மங்கள ஸ்வரூபத்துக்கும், அளப்பரிய நேர்த்தியின் அழகுக்கும், மங்களா சாசனம் பண்ணும் செயலன்றி வேறெதுவும் ஏற்புடையதாகாது `என்று முடிவெடுக்கிறார்கள்.
‘இங்ஞனே போந்தருளி’ என்று இவர்கள் சொன்ன காரணத்திற்காக, பிராட்டியுடன் சீரிய சிங்காசனத்தின் மீது எழுந்தருளி, ஆல வட்டத்தின் காற்றினால் தலை முடி ஆடி நிற்க, பாத பீடத்தின் கீழ் நீட்டிய திருவடிகளும், மடித்திட்ட திருவடிகளையும் கண்டு, தங்கள் கண்களிலும் மார்பிலும் ஒற்றிக் கொள்ளுகிறார்கள்.
திருவுலகு அளந்தத் திருவடிகளை, நாங்கள் நடக்கப் பண்ணினோமே, ‘நடந்த கால்கள் நொந்ததுவோ’ என்று வருந்தி, ‘அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி’ என்று அர்ச்சிக்கிறார்கள்.
பரம்பொருளான உலகத்தைத், தரித்தவனான திருமாலிடமிருந்து, எடுத்துக் கொண்டு தனதாக்கிட எண்ணிய மாபலியால், வருத்தம் வந்தது அன்று. அவனிடமிருந்து பூமியை மீட்டுத் தன் காலடியில் கொண்டு வந்தது போலே, உற்றோர் பெற்றோரையெல்லாம் ஒதுக்கி விட்டு அனாதையாகி நீயே எங்கள் கதி என்று வந்த எங்களிடம், எங்கள் பெண்மை (ஸ்த்ரீத்வம்) மேலே எங்களுக்கு இருந்த அபிமானத்தை, உன் கால் கீழே இட்டு, உன் வடிவழகையும் சீலத்தையும் தூளி தானம் பண்ணி வைத்தாய், இன்று.
பிராட்டி மார்கள் கூசிப் போகும் நளினமான திருவடிகளினால், காட்டு மேடுகளை அளந்தவன்.
‘அடி போற்றி’ – தாங்கள் சொன்ன காரணத்தினால் நடந்து வந்த கால்களுக்கு ஆயாசம் போகட்டும் என்று பெரியாழ்வாரைப் போலே ‘ போற்றி; என்று மங்களாசாசனம் பாடுகிறார்கள். தோழிகள்.
நின்ற இடத்தில் இல்லாமல், அடி மேல் அடி வைத்துச் செல்லாமல், கொடிய கானகங்கள் தாண்டிப் பாய்ச்சலோடு, கால்களில் இரத்தம் தோயச் சென்ற ராமனை, ‘எப்படி நடந்தனை ஓ எம் இராமா’ என்று அன்பர்கள் வருந்திப் பேசும் வண்ணம் இலங்கை நோக்கி நடந்து.
அரண்மனைகளும், கோட்டைகளும் மிகுந்திருந்தும் குளவிக் கூடுகளாய்த் தோன்றிய ஹிம்சகர்கள் (துன்புறுத்துவபர்) வாழும் தென் புறத்து அமைந்த இலங்கை.
அன்பர்களை தானே சென்று ஆட் கொள்ளுமாப் போலே எதிரிகளின் கோட்டைக்குள் தானே சென்று போர் செய்தவனுடைய திறமையை, ‘இலங்கை பாழாளாகப் படை பொருதான்’ – இலங்கையை பாழாக்கி, ராக்ஷதப் படைகளோடு போரிட்டவனுக்குப்’ பல்லாண்டு பாடுகிறார்கள், கோபியர்கள், பெரியாழ்வாரைப் போலே.
சகடாசுரனை, மாரீசனைக் குற்றுயிராய் அழித்த வண்ணமல்லாமல், முழுவதும் கொன்று தீர்த்தான். ‘பிறந்த எழும் திங்களில்’, பிறந்த ஏழே மாதத்துக்குள், இராவணன் போன்ற நேர் எதிரியாய் இல்லாமல், சகடம் – சக்கரம் போலே வேடம் கொண்டு வந்ததனால் ‘கள்ளச் சகடம்’. குழந்தை என்றும் பாராமல், தொட்டிலை உதைத்தவனானதால், சகடாசுரனை ஒரே இலக்கில் முடித்து வைத்தான்.
அறியாக் குழந்தையாய் சகடாசுரனாய் கொன்றது, பசலைத் தனத்தில் செய்த செயலென்றாலும், பருவம் வந்ததும் கன்றாய் நின்ற அசுரனைக் கொன்ற ஆயாசத்துக்காகவும் பாடுகிறார்கள்.
ஓர் அசுரனைக் கொன்று வீசி இன்னொரு அசுரனைக் கொன்றவன் கண்ணன். இருவரும் மேல் விழுந்தால் எத்தனை வலி அடைந்திருப்பாய் என்று வருந்துகிறார்கள், கோபியர்கள் .
 ஒரு அசுரனைகே கருவி போல எறிந்து இன்னொரு அசுரனைக் கொன்றது.
 ‘ –
பொய்க் கன்றென வந்த அரக்கனைக் கொன்றவன் நிஜக் கன்றுகளை கணக்கின்றிப் பொழிந்த மழையிலிருந்து காப்பதற்கு குன்றைக் குடையாய் எடுத்தவன். மனிதரையும் பசுக்களையும் காப்பதற்காக மலையை ஏந்தி நின்ற ‘கொடியேறு செந்தாமரைக் கை விரல்கள் கோலம் அழிந்ததோ, வாடிற்றோ!!
ராமனுடைய கையை அணி செய்த வில்லை போல, கண்ணனின் கையில் உள்ள வேலைக் கண்டு எந்தப் பகைவனும் பயந்து நடுங்கி ஓடிவிடுவான். . ‘கூர் வேல் கொடுந்தொழிலனின்'(நநந்தகோபன் ) மகனானதால், என்றும் வேல் பிடித்திருக்கும் கைகள்.
‘வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு’ என்று பெரியாழ்வார் கண்ணனின் ஆயுதத்துக்குப் பல்லாண்டு பாடிய வகையில், மகள் நாச்சியார் கண்ணன் கையில் பிடித்த வேலுக்குப் பல்லாண்டு பாடுகிறாள்.
அடி போற்றி, திறல் போற்றி, கழல் போற்றி, குணம் போற்றி, வேல் போற்றி என்று வாழ்த்துச் சொன்ன கோபியர்கள், மேலும்
“உனக்கு மட்டுமே என்றைக்கும் சேவகம் செய்யக் கடவது என்று உறுதியோடு இங்கே வந்திருக்கிறோம்.
போரில் இராவணனுக்குக் கூட ஒவ்வொரு நாளும் இரக்கம் காட்டி ‘இன்று புறப்பட்டு நாளை வா’ என்ற வள்ளல் பெருமானே!!சிறு பெண்களாய் நின்னையே நம்பி வந்த  நங்கையராம் எங்கள் மீதிரக்கம் காட்டிடுவாய” என்கிறார்கள் .