இலங்கை தமிழ் அகதிகளுக்கு ஏன் குடியுரிமை கொடுக்க 2019 குடியுரிமை சட்டத் திருத்தத்தில் வழிவகை செய்யவில்லை?
அவர்களும் கொடுமை படுத்தப்பட்டதால் இந்தியாவிற்குள் ஓடிவந்தவர்கள்தானே? பாஜக அரசு ஹிந்துக்களுக்காக வாதாடும் அரசாயிற்றே? இலங்கைத் தமிழ் அகதிகளில் பெரும்பாலோர் ஹிந்துக்கள்தானே?
2019ம் ஆண்டு குடியுரிமை சட்டத்தில் ஏன் இப்படி இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்டும் பாகுபாடு? என திமுகவினர் போர்க்குரல் எழுப்புகிறார்களே! இது நியாயம் மாதிரி தெரிகிறதல்லவா?
முதலில் ஆடு நனைகிறது என்று ஓநாய் கவலைப்படுகிறது என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். ஈரமான ஆட்டை சாப்பிட ஓநாய்கள் என்றும் விரும்புவதில்லை என்பதைத் தவிர இதில் வேறு எந்த நியாயமும் இல்லை!
ஸ்ரீலங்கன் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை கிடைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என தமிழக முதல்வர் எடப்பாடியார் சொன்னது நிறைவேற எவ்வளவு வாய்ப்புள்ளது? இதே கோரிக்கையைத்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் 2016ல் வைத்தார்!
ஆக, 2019 சட்டத் திருத்தத்தில் ஏன் இலங்கை தமிழர்களை சேர்க்கவில்லை என ஸ்டாலினும் இரட்டை குடியுரிமை வேண்டும் என எடப்பாடியும் விடும் கோரிக்கைகள் முழுக்க முழுக்க அபத்தமானவை. ஓட்டு அரசியலுக்கான நாடகம்தான் இது.
இதற்கான உண்மைக் காரணங்களை அலசுவோமா?
இரண்டாம் முறை மோடி வெற்றி பெற்ற பிறகு அவர் தேர்தல் அறிக்கையிலேயே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற துவங்கினார்.
முதலில் தேர்தல் அறிக்கைதான் ஒரு கட்சியின் பையிள், பகவத் கீதை, குரான். அதில் கொடுக்கப்பட்டிருக்கும் விஷயங்கள் விவாதத்துக்குரியவைகளாக இருக்கலாம். ஆனால் அதை நிறைவேற்ற வேண்டியது அக்கட்சியின் பொறுப்பு – அப்படி செய்யாவிட்டால் பத்திரிகைகளும் எதிர்கட்சிகளும் பத்துகால் பாய்ச்சலில் மேலே தாவும். அதை நிறைவேற்றிவிட்டால் தேர்தலுக்கு முன்னால் வைக்கவேண்டிய விமர்சனங்களை, அறிக்கையை நிறைவேற்றிய பின்னர் வைக்கும்.
கட்சிகளும் மக்களிடம் தேர்தல் அறிக்கையை முன்வைத்து ஓட்டு கேட்பதால், வெற்றிபெற்றுவிட்டால் மக்கள் தேர்தல் அறிக்கைக்கு சம்மதம் கொடுத்துவிட்டதாகவே அர்த்தம் கொள்ளவேண்டும். இவ்வளவு பெரிய ‘‘பீடிகை’’ ஏன் என்பதை, மேலும் படியுங்கள், புரிந்துகொள்வீர்கள்.
பாஜக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட ‘காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370 ஐ நீக்குவோம்’ என்பதை முதலில் நிறைவேற்றினார்கள். இதை எதிர்க்கவேண்டும் என குமுறிய கூட்டம் எதிர்க்க முடியாமல் போனது.
பெண்ணுக்கான சம உரிமை வட்டத்துக்குள் முஸ்லிம் பெண்கள் ‘முத்தலாக்’ நீக்கப்பட்ட பிறகு கொண்டு வரப்பட்டார்கள். நாடு முழுவதும் பெண்ணினம் ஒன்று திரண்டு ஆர்ப்பரிக்க, பழமைவாத முஸ்லிம் அடிப்படைவாதிகளின் எதிர்ப்புக் குரல் கேட்காமல் ஓரங்கட்டப்பட்டதில் அதிர்ச்சி அடைந்தார்கள்.
தேசிய புலன் விசாரணை சட்டம், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்ப வர்களுக்கு தண்டனை என்றது. அதுவும் பெரும் ஆதரவோடு நிறைவேறியது. முஸ்லிம்களுக்கும் எதிர்கட்சிகளுக்கும் தாங்கொணாத் துயரைத் தந்தது.
இந்நிலையில்தான் 2019 குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்ட வன்மமும் கோபமும் இப்போது வெடித்து சிதறின. இம்முறை வெகு ஜாக்கிரதையாக ‘‘இஸ்லாமியர்களை நாட்டைவிட்டு ‘‘விரட்டும்” சட்டம் என பிரச்சாரம் செய்யப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த உண்மை ஊர்வலம் வருவதற்குள் பொய் உலக வலம் வந்துவிட்டது. ஊடகங்கள், இடதுசாரிகள் தேசவிரோதிகள் ஒன்று சேர்ந்தார்கள்.
நாடெங்கிலும் முஸ்லிம் அடிப்படை வாதிகள் மட்டுமே இதை கையிலெடுத்தார்கள். தமிழ்நாட்டில் அவர்களோடு திமுக இதற்கு உள்ளூர் Flavour (உள்ளூர் வாசனை ருசி) கொடுத்தது. அதுதான் ‘இலங்கைத் தமிழர்களும் ஹிந்துக்கள்தானே. அவர்களுக்கு ஏன் குடியுரிமை இல்லை?’ என ஓங்கி வாசித்தது. 2009, 10, 11ம் ஆண்டுகளில் ஏறத்தாழ 15 ரிட் மனுக்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை தரவேண்டும் என போடப்பட்டது. அனைத்தையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சட்டத்தில் அதற்கு இடமில்லை என்று சொல்லி. இந்த உண்மை ஸ்டாலினுக்குமே அனைத்து ‘‘பொய்ப் போராளிகளுக்கும்’’ தெரியும்.
இன்று இந்தியாவில் 107 முகாம்களில் ஏறத்தாழ 59,000 இலங்கை தமிழ் அகதிகள் இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே இங்கு குடியுரிமை கோரவில்லை. காரணம் நாட்டில் மீண்டும் குடியேறி தங்களது சொந்த ஊரில்/சொந்த நிலத்தில் மீண்டும் விவசாயம் செய்து வாழவிரும்புகின்றனர்.
திறன் உள்ள குடிமக்கள் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளில் குடியேறி குடியுரிமை பெற்றுவிட்டனர். இதில் பலர் இந்தியாவிலிருந்த ‘அகதிகளுக்கு’ (சொந்தங்களுக்கு) தங்கள் மூலம் குடியுரிமை பெற்று தந்துவிட்டனர். மீதமுள்ளவர்கள் திறன் இல்லாத அகதிகள். இவர்களுக்கு தேவை தங்கள் நாட்டில் மீண்டும் குடியேற்றமே!
இதற்குத் தேவை ராஜரீக நடிவடிக்கைகளே! அதாவது மத்திய அரசு இலங்கையுடன் நல்லுறவு ஏற்படுத்தி இந்த அகதிகளுக்கு ‘‘மீள்குடியேற்றம்’’ பெற்றுத் தந்து, சிங்களவர் குடியேறி பறித்துக்கொண்ட தங்களுடைய நிலங்களை மீட்டுத்தந்தது தாங்கள் தங்கள் பகுதியில் மீண்டும் நழ்வாழ்வு வாழவேண்டும் என்பதே!
இதைத்தான் இப்போது மோடி அரசு செய்து கொண்டிருக்கிறது! இதுமட்டுமே தேவையானது – சாத்தியமானது – மோடியால் மட்டுமே செய்ய முடிந்தது. இப்போது மோடி அரசு செய்து கொண்டிருப்பது.
இந்த மீள்குடியமர்த்தலுக்கு மிக முக்கியமானது அரசியல் ரீதியாக இரண்டு நாடுகளுடையே நல்லுறவு, அமைதி. ஸ்டாலின் போன்று Poovocative – அச்சுறுத்தும் பேச்சுகள் அமைதியையும் நற்சூழலையும் கெடுத்துவிடும்.
இப்போது நற்சூழலை கெடுக்கும் பேச்சுக்களைத் தான் திமுகவும் ஸ்டாலினும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
எடப்பாடியின் இரட்டை குடியுரிமை கோரிக்கை அரசியல் ரீதியானது. சட்டத்திலும் நிஜத்திலும் நடைமுறைப்படுத்த முடியாதது, ஸ்டாலினும் எடப்பாடியும் தெரிந்தே அரசியல் செய்கிறார்கள். ஸ்டாலின் இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்கிறார். எடப்பாடியார் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்து, தானும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாளர் என மேல்கூச்சல் இடுகிறார்.
ஐ.நா தீர்மானப்படி அகதிகளாக வந்தவர்களுக்கு வாழ வழி செய்யமுடியும்! குடியுரிமை கொடுத்தல் என்பது கிடையாது. உலகில் எந்த நாட்டிலும் அடைக்கலம் புகுந்த மக்கள் ஆடோமேடிக் ஆக குடியுரிமை பெற்ற வரலாறு கிடையாது. அதற்கான சட்டமும் எந்நாட்டிலும் இல்லை. இந்தியாவில் அபத்தமானது. ஆபத்தானது.
(படிக்க கோலாகல ஸ்ரீனிவாசன் கட்டுரை)
சாதாரணமாக ஒரு நாட்டிலிருந்து ஊடுருவுபவர்கள், ஆயுதம், போதை மருந்து கடத்துபவர்களாக இருப்பார்கள். இதில் சம்பாதிப்பதை எடுத்துக்கொண்டு தன் நாட்டிற்கே செல்ல விரும்புவார்கள். அகதிகள் அரசியல் சூழல் காரணமாக விரட்டிவிடப்பட்டு ஓடிவருபவர்கள். இவர்களும் சூழ்நிலை சரியான பின் நாடு திரும்பவே விருப்பப்படுவர். இரண்டு பேருமே வேறுபட்ட காரணங்கள் கொண்டவர்கள்.
இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வேண்டும் என்பதற்கு அவர்களுக்கு திடீர் ஹிந்து மத பட்டம் கொடுத்து திமுக போராடுவது விசித்திரமானது. இதுவரை தமிழர்களாக பார்த்தவர்கள், மற்ற 3 நாடுகளில் ஹிந்து என்பதால் குடியுரிமை தருவதை எதிர்ப்பவர்கள், தற்போது’’ இலங்கை தமிழ் ஹிந்துக்கள்’’ மீதான ஓநாய்ப் பாசத்தை வெளிப்படுத்துவது விநோதமாக இருக்கிறது!
ஆக 2019 CAA சட்டத்தை எதிர்க்க தமிழ்நாட்டில் இலங்கை தமிழர் சேர்ப்பு என்னும் ஒரு உள்ளூர் ‘‘சுவையை’’ சேர்த்து திமுக கபடநாடகம் ஆடுகிறது. இலங்கை தமிழ் அகதிகளுக்கான தீர்வு அவர்களை இலங்கையிலேயே மீண்டும் குடியமர்த்துவதுதான் என்பதும் அதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள் என்பதும் அதைத்தான் மோடி அரசு முயன்று வருகிறது என்பதும் சரித்திரம் சொல்லும் உண்மை.
இறுதியில் எப்போதும் உண்மையே வெல்லும். சத்தியமேவ ஜெயதே!