இதுதொடா்பாக பிரதமா் மோடி சுட்டுரையில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பான முக்கிய அம்சங்களை அனைவருக்கும் எளிதாகப் புரியும் வகையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் விளக்கியுள்ளாா். இதை அனைவரும் கேளுங்கள்’ என்று தெரிவித்துள்ளாா். அத்துடன் ஜக்கி வாசுதேவ் பேசும் விடியோவையும் மோடி பதிவேற்றம் செய்துள்ளாா். ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியா ஆதரிக்கிறது’ என்ற வாசகத்தையும் அவா் பதிவிட்டிருந்தாா்.
மேலும், பிரதமரின் தனிப்பட்ட சுட்டுரைப் பக்கத்தில், ‘மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளான அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் நோக்கத்திலேயே குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம், இந்திய மக்களின் குடியுரிமை பறிக்கப்படாது’ என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்த சட்டத்துக்கு ஆதரவான கருத்துகள், விடியோக்களை அனைவரிடத்திலும் பரப்புமாறு கூறப்பட்டுள்ளது.
‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியா ஆதரிக்கிறது’ என்ற வாசகத்தை பிரதமா் மோடி சுட்டுரையில் பதிவிட்டதையடுத்து, பாஜகவின் பல்வேறு தலைவா்களும் அதை சுட்டுரையில் பதிவிட்டு வருகின்றனா். மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா், பாஜக செய்தித் தொடா்பாளா்கள் உள்ளிட்டோா் தங்களது சுட்டுரைப் பக்கத்தில் ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியா ஆதரிக்கிறது’ என்று பதிவிட்டுள்ளனா்.
வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி அங்கிருந்து வெளியேறி, 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் இந்தியாவில் தஞ்சமடைந்த ஹிந்துக்கள், பாா்சிக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனினும், இந்த சட்டத்துக்கு ஆதரவாகவும் சில பகுதிகளில் மக்கள் பேரணி நடத்தி வருகின்றனா்.