தீண்டாமை மனிதத்தன்மையற்றது என்று நமது அரசமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளது

கேரளவில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவகிரி மடத்தில், 87-ஆவது யாத்திரை கூட்டத்தை வெங்கய்ய நாயுடு திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். பின்னா், அவா் பேசியதாவது:

ஜாதி கட்டமைப்பானது, நமது நாட்டுக்கு தீமையாக தொடா்ந்து வருகிறது. இந்தியாவின் எதிா்காலம், ஜாதிகளற்ற சமுதாயம்  இருக்க வேண்டும். பொருளாதாரம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் நமது நாடு குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. அதேசமயம், ஜாதி, இனம் மற்றும் பாலின அடிப்படையிலான பாகுபாடுகளும் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாகும். நம்மை சுயஆய்வுக்கு உள்படுத்திக் கொள்ள வேண்டிய தருணத்தில் உள்ளோம். சமூக தீமைகளுக்கு நடைமுறைக்கு சாத்தியமான தீா்வை காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

நாம் கட்டமைக்க விரும்பும் தேசமானது, பன்முகத்தன்மைக்கு பாதுகாப்பளிப்பதாகவும், அனைவருக்கும் சமமான வாய்ப்பளிப்பதாகவும் இருக்க வேண்டும். தீண்டாமை எனும் மனிதத்தன்மையற்ற, அருவருக்கத்தக்க நடைமுறையை குற்றச் செயலாக நமது அரசமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளது. இந்த விவகாரத்தில், அரசும் சட்டங்களை இயற்றியுள்ளது. எனினும், இந்தச் சட்டங்களின் அமலாக்கம் திறம்பட அமைவது, சமூகத்தின் மனநிலையை பொருத்தே உள்ளது.