‘குஜராத்தில், 2002ல் நடந்த கலவரத்துக்கும், அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடியின் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி நானாவதி கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. உயிரிழப்புகடந்த, 2002ல், கோத்ரா ரயில் நிலையத்தில், சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதில், அயோத்தி சென்று திரும்பிய, 59 கரசேவகர்கள் உயிரிழந்தனர்.
அதையடுத்து, குஜராத்தின் பல்வேறு இடங்களில் வன்முறைகள் வெடித்தன. இதில், 1,000த்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதில், பெரும்பாலானோர் சிறுபான்மையினர்.
இந்த கலவரங்கள் குறித்து, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.டி.நானாவதி, குஜராத் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அக் ஷய் மேத்தா அடங்கிய விசாரணைக் குழுவை, அப்போது முதல்வராக இருந்த, பிரதமர் நரேந்திர மோடி அமைத்தார்.இந்தக் குழுவினர், 2014ல், தங்களுடைய அறிக்கையை, அப்போதைய குஜராத் பா.ஜ., முதல்வர் ஆனந்திபென் படேலிடம் ஒப்படைத்தனர்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பின், இந்த அறிக்கை, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.ஆதாரம் இல்லைமொத்தம், 1,500 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:குஜராத் மாநில அரசைச் சேர்ந்த எந்த ஒரு அமைச்சரும், வன்முறையை துாண்டியதாகவோ, ஆதரித்ததாகவோ, வன்முறையில் ஈடுபட்டதாகவோ குற்றஞ்சாட்ட எந்த ஆதாரமும் இல்லை.சில இடங்களில் போதிய எண்ணிக்கையில் இல்லாதது, ஆயுதங்கள் இல்லாதது போன்ற காரணங்களால், போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது.
அதே நேரத்தில், ஆமதாபாதில் கலவரத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கையை போலீசார் எடுக்கவில்லை. கடமை தவறிய போலீஸ் அதிகாரிகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.