ரஃபேல் போர் விமானக் கொள்முதல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் திரித்து, பிரதமர் மோடியை அவதூறாகப் பேசியதாக ராகுல் காந்தி மீது பாஜக எம்.பி. தாக்கல் செய்த கிரிமினல் அவதூறு வழக்கை உச்ச நீதிமன்றம் நேற்று முடித்து வைத்தது.
மக்களவைத் தேர்தலின்போது அமேதி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் ரஃபேல் ஒப்பந்தத் தீர்ப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்குப் பதில் அளித்த ராகுல் காந்தி, ” காவலாளி எனக் கூறிக் கொள்பவர் திருடன் என்று நீதிமன்றமே கூறிவிட்டது” என்று தெரிவித்தார். நீதிமன்றத்தின் உத்தரவை தனக்கு ஏற்றார்போல் ராகுல் காந்தி பேசியது, தேசிய நாளேடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியானது.
இதனால், பாஜகவைச் சேர்ந்தவரும், டெல்லி எம்.பி.யுமான மீனாட்சி லெகி, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக கிரிமினல் அவமதிப்பு வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்தி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக நீதிபதிகள் , பிரதமருக்கு எதிராக ராகுல் கூறிய கருத்து உண்மைக்கு மாறானது. முறையாக ஆராயாமல் அவர் இதுபோன்று கருத்தை தெரிவித்திருக்கக் கூடாது. எதிர்காலத்தில் ராகுல் காந்தி மிகவும் கவனமாகப் பேசுவது அவசியம் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்தது.