தீபக் சாஹரின் ‘ஹாட்ரிக்’ விக்கெட், ஸ்ரேயாஸ் அய்யர், ராகுலின் அரைசதம் ஆகியவற்றால் நாக்பூரில் நேற்று நடந்த வங்கதேசத்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது.
இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றது.
2019-ம் ஆண்டில் இந்திய அணி உள்நாட்டில் வென்ற முதல் டி20 தொடர் இதுவாகும். இதற்கு முன் ஆஸ்திரேலியாவிடம் டி20 தொடரை இழந்த இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவிடம் சமன் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கோலி, தோனி, பும்ரா, புவனேஷ்குமார், ஹர்திக் பாண்டியா என டி20 போட்டிக்கே உரித்தான வீரர்கள் இல்லாத நிலையில் அனுபவம் குறைந்த இளம் வீரர்களை வைத்து ரோஹித் சர்மா கோப்பையை வென்று கொடுத்துள்ளார் என்பது பாராட்டுக்குரியது.