‘இந்தியாவில், கடந்த, 1990களில் இருந்ததை விட, 50 சதவீத வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது’ என, உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கியும், ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியமும் ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து, சர்வதேச பொருளாதார நிலை குறித்து விவாதிக்கும். இந்த ஆண்டுக்கான கூட்டத்துக்கு முன் வெளியிட்டு உள்ள அறிக்கையில், உலக வங்கி கூறியுள்ளதாவது:தீவிர வறுமை ஒழிப்பு மற்றும் பருவ கால மாறுதல் பிரச்னைகளில், இந்தியா மிகப் பெரிய முன்னேற்றங்களை சந்தித்துள்ளது.
கடந்த, 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 7 சதவீதத்தை தாண்டியுள்ளது. கடந்த, 1990களில் இருந்ததை விட, வறுமை சதவீதம் பாதியாகக் குறைந்து உள்ளது. மனித வள மேம்பாட்டில் மிகவும் வலுவான நிலையில் உள்ளது.
மின்சார உற்பத்தி
வறுமையை முற்றிலுமாக ஒழிக்கவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், இந்தியா மிகப் பெரிய சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. நகர்ப் பகுதிகளில் உள்ள நிலங்களை அதிக பலன் உள்ளதாகவும், கிராமப் பகுதிகளில் அதிக விவசாய உற்பத்தி கிடைப்பதாகவும் பயன்படுத்த வேண்டும்.நீர் மேலாண்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.அனைத்து மக்களுக்கும் மின்சாரம் கிடைக்க வேண்டும். அதே நேரத்தில், காற்றை மாசுபடுத்தாத வகையில், மின்சார உற்பத்தி இருக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு
வரும், 2030ம் ஆண்டு வரை, ஜி.டி.பி., எனப்படும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 8.8 சதவீதத்தை, உள்கட்டமைப்பு பணிகளில் முதலீடு செய்ய வேண்டும்.வளர்ச்சி என்பது தொடர்ச்சியாக இருக்க வேண்டும். ஆண்டுக்கு, 1.3 கோடி பேர் வேலை பார்க்கும் வயதை எட்டுகின்றனர். ஆனால், 30 லட்சம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
அதனால், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதேபோல், வேலை பார்க்கும் பெண்களின் சதவீதம், 27 சதவீதமாக உள்ளது. இது மிகவும் குறைவு.மத்திய வருவாய் நாடுகளுக்கு தேவையான, எதிர்பார்க்கும் தரத்தில் பொருட்கள் தயாரிப்பு இருக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச நிதியம் திருப்தி
சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக உள்ள, இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட, கீதா கோபிநாத், கடந்த ஆண்டு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 6.8 சதவீதமாக இருந்தது. அது இந்தாண்டு, 6.1 சதவீதமாக இருக்கும் என, கணித்துள்ளோம். வரும், 2020ல் இது, 7 சதவீதத்தை எட்டும் என்றும் கணித்து உள்ளோம்.
கடந்த ஆண்டை விட பொருளாதார வளர்ச்சி குறைவு என்றாலும், உலக அளவில் பார்க்கையில், இது மோசமானதல்ல.வங்கித் துறையில் உள்ள பிரச்னைகள் மற்றும் வங்கி அல்லாத பிற நிதித் துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தற்போது, மத்திய அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள், பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் உள்ளது. நிதிப் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.