உயர் பண்பு ; மகான்களின் வாழ்வில்

நரேந்திரரின் (விவேகானந்தர்) தந்தை விசுவநாத தத்தர் வழக்கறிஞராக இருந்தார். நன்கு சம்பாதித்த காலத்தில் ஏழைகளுக்கு வாரி வழங்கும் வள்ளலாக இருந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பம் வறுமையில் வாட ஆரம்பித்தது. நரேந்திரருக்கு இரண்டு மூத்த சகோதரிகளும், இரண்டு இளைய சகோதரர்களும், இருந்தார்கள். viveganandarநரேந்திரர்தான் மூத்த பிள்ளை. பி.ஏ. முடித்த பிறகு பி.எல். படிப்பதற்காகச் சேர்ந்திருந்தார். ஒரு நேர உணவுக்குக் கூட வீட்டில் கஷ்டப்படும் சூழ்நிலை கண்டு வருந்தினார். ஏதேதோ வேலைக்கு முயற்சி செய்தார். அவரது முயற்சிகள் அனைத்தும் வீணாயின.

கல்கத்தா தக்ஷிணேஸ்வரத்தில் உள்ள பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணருடன் நரேந்திரனுக்குத் தொடர்பு இருந்தது. ஸ்ரீ ராமகிருஷ்ணர், காளி தேவியை நேரில் தரிசித்து ஆசி பெற்றவர். ஒருநாள் அவரை நேரில் சந்தித்து, தனது வீட்டின் கஷ்ட நிலையைத் தெரிவித்து, தனக்காக காளிதேவியிடம் பிரார்த்திக்கும்படி வேண்டினார்.

ஸ்ரீராமகிருஷ்ணர் நீயே காளிதேவியிடம் உனது வறுமையைப் போக்கும்படி பிரார்த்தனை செய்” என்று கூறி அனுப்பி வைத்தார். நரேந்திரரும் காளிதேவி சன்னதி முன்பு நின்று கொண்டு மனமுருகி பிரார்த்தனை செய்தார்.

அம்மா, எனக்கு ஞானத்தையும், விவேகத்தையும், பக்தியையும் கொடு” என்று பிரார்த்தித்தார். தான் எதற்காக வந்தோம் என்பதையே மறந்து போனவர், பின்னர் வெளியே வந்து நடந்ததை ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் கூறினார். அவரோ நரேந்திரனை மீண்டும் பிரார்த்தனை செய்ய அனுப்பினார். இப்படி மூன்று முறை நரேந்திரன் சென்றபோதும், தேவியின் முன்பு தனக்காகப் பிரார்த்திக்க அவரால் முடியவில்லை.

நரேந்திரனின் உயர்ந்த பண்பைப் பார்த்து மகிழ்ந்து, ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவரை ஆசிர்வதித்தார்.