ஐரோப்பிய நாடான பிரான்சில் நாளை நடக்கும் நிகழ்ச்சியில், ‘ரபேல்’ ரக போர் விமானம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதைப் பெறுவதற்காக சென்றுள்ள, பா.ஜ., மூத்த தலைவர்களில்ஒருவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங், ஆயுத பூஜையை அங்கு கொண்டாட உள்ளார்.
நம் விமானப் படைக்கு, 36 ரபேல் ரக போர் விமானங்கள் வாங்க, பிரான்ஸ் நாடுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த நாட்டின், ‘டசால்ட் ஏவியேஷன்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த அதி நவீன போர் விமானத்தின், முதல் விமானம், பாரிசில் நாளை நடக்கும் நிகழ்ச்சியில் ஒப்படைக்கப்பட உள்ளது.
இதை பெறுவதற்காக, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், பாரிஸ் செல்கிறார். அக்., 8, விமானப் படை தினமாகவும் உள்ளது. மேலும், அன்று ஆயுத பூஜையும் கொண்டாடப்படுகிறது. உள்துறை அமைச்சராக அவர் பணியாற்றியபோது, ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூஜையைக் கொண்டாடுவது வழக்கம். அதுபோல, தற்போதும் பாரிசில் ஆயுத பூஜையைக் கொண்டாட, ராஜ்நாத் சிங் திட்டமிட்டுள்ளார்.