‘நீட்’ தேர்வில் ஆள் மாறாட்ட மோசடியை தடுக்க அதிரடி நடவடிக்கை

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு ‘நீட்’ என்னும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

 

உதித் சூர்யா என்ற மாணவர் ‘நீட்’ தேர்வு எழுதாமல், மும்பையில் மற்றொருவரை எழுத வைத்து, அவரை நல்ல மதிப்பெண் பெற வைத்து, அதன் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

முகமது இர்பான் என்ற மாணவர் 207 மதிப்பெண்கள் பெற்று அதை 407 என திருத்தி, தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளார் என தெரியவந்தது. பிரவீண், ராகுல் டேவிஸ் ஆகிய மாணவர்கள் தங்களுக்கு பதிலாக மற்றவர்களை வட மாநிலங்களில் ‘நீட்’ தேர்வு எழுத வைத்து அந்த மதிப்பெண்கள் அடிப்படையில் பிரபல தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

அதே நேரத்தில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள ‘நீட்’ தேர்வில் இப்படி ஆள் மாறாட்ட மோசடிகள் நடைபெறாமல் தடுப்பதற்கு தேர்வினை நடத்துகிற தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது தொடர்பாக அந்த முகமையின் தலைமை இயக்குனர் வினீத் ஜோஷி கூறியதாவது:-

ஆள் மாறாட்ட மோசடியை தடுப்பதற்கு அடுத்த ஆண்டு முதல் ‘நீட்’ தேர்வு எழுதுகிற மாணவ, மாணவிகளின் ஆதார் தகவல்களை பயன்படுத்திக்கொள்வதற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம்.

மத்திய அரசு ஒப்புதல் அளித்து விட்டால், மாணவ, மாணவிகளின் கைரேகை, கண்கருவிழி பதிவு ஆகியவை ஆதாருடன் ஒப்பிட்டு பார்க்கப்படும். அதுவும் விண்ணப்பிக்கிறபோதும், தேர்வின்போதும், கவுன்சிலிங்கின் போதும், கல்லூரியில் சேருகிறபோதும் ஒப்பிட்டு பார்க்கப்படும்.

மாணவ, மாணவிகள் தங்கள் ஆதார் எண், கண் கருவிழி பதிவு, கைரேகை பதிவுகள்,  ஆகியவற்றை அளிக்குமாறு கோரப்படுவார்கள்.

தற்போது தேர்வு அறையில் தேர்வு எழுதத் தொடங்கும் போதும், தேர்வு எழுதி முடித்து விட்ட பின்னரும் என இரு முறை மாணவ, மாணவிகளின் கைரேகை பதிவு மட்டும் பெறப்படுகிறது. டிஜிட்டல் ஆவணங்கள் எதுவும் பெறப்படுவதில்லை.

‘நீட்’ தேர்வில் ஆள் மாறாட்ட மோசடிகள் இந்தளவுக்கு நடைபெறும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. தேர்வில் காப்பி அடித்து விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தினோம். அதனால் தேர்வு அறைக்கு அவர்கள் என்னவெல்லாம் கொண்டு வரவேண்டும் என்பதில் கவனமாக இருந்து விட்டோம். அடுத்த ஆண்டு முதல் கடுமையான விதிகளை அமல்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.