உலகில் ஊழல் செய்தவர்கள் வரி ஏய்ப்பு செய்தவர்கள் சேர்த்த கருப்பு பணத்தை எல்லாம் இதுநாள் வரை பதுக்கி வைக்க பாதுகாப்பான இடமாகக் கருதப்பட்டது ஸ்விட்சர்லாந்து ( சுவிஸ்) நாட்டு வங்கிகள். நம் நாட்டு ஏமாற்றுக்காரர்களுக்கும் சுவிஸ் வங்கிகள் ஒரு புகலிடம். ஆனால், அவையெல்லாம் பழங்கதை ஆகிவிட்டது.
ஆமாம், சென்ற மாதம் (ஆகஸ்ட்) 29-30 தேதிகளில், சுவிஸ் அரசின் உயர் அதிகாரிகள் புதுதில்லிக்கு வந்து நம் நாட்டின் வருமான வரி- நிதித்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடி சில முடிவுகளை எட்டி இருக்கிறார்கள். அதன்படி, 2018 முதல் சுவிஸ் நாட்டின் வங்கிகளில் இந்தியர்கள் வைத்துக்கொண்டுள்ள கணக்குகள், அவர்கள் பெயர்கள், முகவரிகள், கணக்கில் உள்ள தொகைகள் போன்ற எல்லாவிவரங்களும் பகிர்ந்து கொள்ளப்படும்.
எப்படியும் இப்படி ஒரு நடைமுறை வந்துவிடும் என்று மோப்பம் பிடித்து சென்ற ஆண்டிலேயே (2018ல்) கணக்கை முடித்துக் கொண்டுவிட்டவர்களும் தப்பிக்க இயலாது. ஏனென்றால், அவர்கள் விவரத்தையும் சுவிஸ் அரசு தெரிவிக்கப்போகிறது.
சுவிஸ் நாட்டின் வங்கிகள் மீது பல பத்தாண்டுகளாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. பின் என்ன, தத்தம் நாடுகளில் ஊரை அடித்து உலையில் போட்டு கொள்ளை அடித்த பணத்தை எல்லாம் சுவிஸ் வங்கியில் குவித்து வைத்தார்கள். இதனால் அந்த அந்த நாடுகளில் ஊழல்வாதிகளின் மீது உருப்படியாக நடவடிக்கை எடுப்பதில் பெரிய பயன் விளையாமல் போயிற்று. அந்த அளவிற்கு சுவிஸ் வங்கிகள் வாடிக்கையாளர் ரகசியம் காக்கும்.
சென்ற பத்தாண்டுகளாக அமெரிக்கா , ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற அரசுகள் தொடர்ந்து எடுத்த வந்த முயற்சிகளினால் சுவிஸ் அரசு கீழிறங்கி வந்து வாடிக்கையாளர் விவரத்தை பகிர்ந்து கொள்ள அந்நாட்டு வங்கிகளுக்கு அறிவுறுத்த தொடங்கியது, அந்த நெறிமுறையை வங்கிகள் கடைபிடிப்பதைக் கண்காணிக்கவும் செய்தது.
2011-12 முதலே சுவிஸ் நாடு முன் வந்தாலும் அப்போதிருந்த யுபிஏ அரசு பெரிய ஆர்வம் காட்டவில்லை. (புரிந்து கொள்ளக்கூடியதுதானே).
2014 மே மாதத்தில் பதவி ஏற்ற மோடிஎடுத்த முதல் நடவடிக்கையே கருப்பு பண ஒழிப்புக்கானதுதான். மீண்டும்மீண்டும்மோடிஅரசு பல மட்டங்களில் போராடிப் பெற்றது தான் போன வார சுவிஸ் வங்கி வெற்றி. இந்த மாதம் (செப் 1) முதல் தவணையாக விவரங்கள் வெளிவரும், அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் விவரங்கள் கிடைக்கும். அது மட்டுமல்ல, தனியார் மீதும் நிறுவனங்கள் மீதும் குற்ற வழக்குகள் பொருளாதார நடவடிக்கைகள் எடுக்க பாரத அரசாங்கம் அவர்களை ( அ) அவற்றைப் பற்றிய தனியாக கோரிக்கை விடுத்தால் சுவிஸ் வங்கிகள் விவரங்களை விரைவாக பகிர்ந்து கொள்ள வேண்டும். இது கட்டாயம்.
அப்படியாக, சென்ற வாரம் கலைந்தது சிதம்பர ரகசியம் மட்டுமல்ல, சுவிஸ் வங்கி ரகசியமும் தான்.