”போர்க்களத்தில் கடைசி வரை போராட வேண்டும் என்ற மனோநிலைதான் இருந்தது”

கடந்த வார இதழின் தொடர்ச்சி…

இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பாரத இளைஞர்களுக்கு தேசப்பற்று அதிகம். நமது இளைஞர்களை திசை மாற்றுவது ஒன்றே ஒன்றுதான் அது போதை மட்டுமே, அதன் பின்னால் செல்லாதீர்கள்.

அடிபட்ட காலத்தில் ‘கீர்த்தி சக்ரா விருது’ உங்களுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்த்தீர்களா?

விருது வழங்கப்படும் என்று நாங்கள் வேலை செய்வதில்லை. எனக்கு விருது வழங்கப்பட்ட போது தான் தெரியும் ‘கீர்த்தி சக்கரா’ என்ற விருது ஒன்று இருப்பதே. நாட்டிற்காக மட்டுமே, நாங்கள் சேவை செய்கிறோம்.

கடுமையான பயிற்சி நேரத்தில் உங்கள் உயிர் போய்விடும் என்று நினைத்தது உண்டா?

உயிர் போகும் அளவிற்கு கடுமையான பயிற்சிகளை பாரத ராணுவம் கொடுப்பதில்லை.

நீங்கள் பணியில் சேர்ந்து 9 வருடங்கள் ஆகிறது. இப்பொழுது நமது ராணுவத்தில் என்னென்ன? மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது?

நான் 2017ல் தான் பணியில் சேர்ந்தேன். முன்பு கேள்விப்பட்டிருக்கிறேன் காஷ்மீர் போனால் கல்லெறிவார்கள், தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகமாக நடக்கும். தலையை வெட்டிக் கொண்டு சென்று விடுவார்கள் என்று சீனியர்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பொழுது அது மாதிரி எதுவும் நடப்பதில்லை நன்றாகத்தான் இருக்கிறது.

ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் (ஆர்.ஆரில்) நீங்கள் இருந்த போது நடந்த ஆப்ரேஷனில் உங்கள் டீமில் இருந்தவர்கள் மொத்தம் எத்தனை பேர்?

100 பேர் சென்றோம். ஒரு கம்பெனியில் 11 பேர் இருப்போம். எங்களுக்கு மட்டும்தான், டார்கெட்டை நெருங்கும் வாய்ப்பு கிடைத்தது. மொத்தம் ஐந்து தீவிரவாதிகள் இருந்தார்கள்.

தீவிரவாதிகள் உடன் சண்டை நடக்கும் என்று உங்களுக்கு முன்பே தகவல் வந்ததா?

சீனியர் ஆபீஸர்கள் தகவல் கொடுப்பார்கள். நாங்கள் அவர்களை தேடி செல்வோம். அவர்கள் நம்மை தேடி வருவது ரொம்ப அபூர்வமாகத்தான் இருக்கும்.

ஆப்ரேஷன் நடந்த இடத்தின் பெயர் என்ன?

குல்காம் மாவட்டதில் நடந்தது. டார்கெட் மிக அருகில் இருந்தது, எனக்கு தெரியாது. நான் மட்டும் இரண்டு பேரை சுட்டு வீழ்த்தினேன். குரூப் ட்ரைனிங்கில் இருந்தவரும், நானும் ஒரு தீவிரவாதியை சுட்டு வீழ்த்தினோம். டீமிலிருந்த மற்றவர்களின் உதவியுடன் மீதி இருந்தவர்களை வீழ்த்தினோம்.

நீங்கள் அடிபட்டு டார்கெட் பக்கத்தில் இருந்த சமயத்தில் அங்கு என்ன நடந்தது?

டார்கெட்டை விட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் நான் இருந்தேன். இந்த வாய்ப்புக்காகதான் எல்லோரும் காத்துக் கொண்டு இருக்கிறோம். ஆப்ரேஷன் முடிந்த பின்புதான் தெரியும். நாங்கள் எத்தனை பேர் இறந்தோம், தீவிரவாதிகள் எத்தனை பேர் இருந்தார்கள் என்று.

அடிபட்டு கீழே கிடந்த போது என்ன உணர்வு உங்களுக்கு இருந்தது?

அங்கே இருந்து சமாளிக்க வேண்டும், நமக்கு அடிபட்டுவிட்டது என்று தீவிரவாதிகளுக்கு தெரியக் கூடாது, நம் உடம்பை அசைக்க கூடாது, வலியால் கத்த கூடாது, நாம் இருக்கும் நிலையை மாற்றக்கூடாது. ஒருவேளை நமது நிலை எதிரிகளுக்கு தெரிந்து விட்டால், நமக்கு நெருக்கமாக வந்து, நமது பாதுகாப்பை உடைத்து விட்டு, அவர்கள் முன்னேறி சென்று விடுவார்கள். என்னால் முடிந்த வரை நான் சப்போட்டாக இருந்தேன்.

நீங்கள் அடிபட்டு கிடந்த இடம் எது?

ஆப்பிள் தோட்டத்தில் கிடந்தேன். தீவிரவாதியும் படுத்துக்கொண்டு இருந்தான், நானும் படுத்துக்கொண்டு இருந்தேன். தரை ஈவனாக தான் இருந்தது. அவன் சற்று எழுந்த பொழுது, சுட்டு வீழ்த்தினேன். எனது கையில், முகத்தில் காயம் ஏற்பட்டு இருந்த சமயத்தில், எனக்கு மயக்கம் எல்லாம் இல்லை. என்னை மீட்டது நமது ராணுவம் தான். மூன்று நாட்கள்
நான் மருத்துவமனையில் கோமாவில் இருந்தேன்.

தீவிரவாதிகள் என்ன மாதிரி ஆயுதங்கள் வைத்திருந்தார்கள்?

ஏகே 47 ஆயுதங்கள். நம்மிடமும் அதே ஆயுதங்கள் தான் உள்ளது.

மருத்துவமனையில் கண் விழித்து பார்த்தபோது உங்கள் உணர்வு எப்படி இருந்தது?

வீட்டு நினைப்பு அடிக்கடி வந்து சென்றது. மனைவி 3 மாத கர்ப்பிணியாக இருந்தார்கள். நம் உடல் சரியாகிய பின்பு தான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஐந்து மாதம் வீட்டிற்கு செல்லாமல், யாரையும் என்னை பார்க்க அனுமதிக்காமல் இருந்தேன். நான் நன்றாக இருக்கிறேன் என்று ஏதேதோ பொய் சொல்லிக்கொண்டு இருந்தேன். மூன்று மாதங்கள் என்னால் பேச முடியவில்லை. வாட்ஸ் அப் சாட்டில் தான் பேசிக் கொண்டோம்.

நீங்கள் மருத்துவமனையில் இருந்த பொழுது அதிகம் மிஸ் செய்த விஷயம் என்ன?

ஆக்டிவா இருந்த ஒருவர் திடீரென்று ஐ.சி.யூ.வில் அட்மிட் செய்யப்பட்டபோது, ஒரு மாதிரியாக இருந்தது. நமது
‘பிட்னஸ்’ போய்விட்டதோ என்று நினைத்தேன்

குடியரசு தலைவரிடம் நீங்கள் விருது வாங்கும் போது உங்கள் உடம்பும், மனமும் எப்படி இருந்தது?

மிகவும் சந்தோஷமாக இருந்தது. இறந்தவர்களுக்கு தான் பெரும்பாலும் விருது கொடுத்திருக்கிறார்கள்.

நீங்கள் முதல்வரிடம் விருதும், ஊக்கத் தொகையும் பெறும்போது அவர் உங்களிடம் என்ன கூறினார்?

உங்களால் தமிழ்நாட்டிற்கே பெருமை. உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி என்று கூறினார். உடம்பைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறினார். அவரிடம் ஐந்து நிமிடம் பேசினேன்.

துணை குடியரசுத் தலைவர், பிரதமரை நீங்கள் சந்தித்தபோது அவர் உங்களிடம் என்ன கூறினார்?

பிரதமர் என்னிடம் “உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்” என்று ஹிந்தியில் கூறினார். துணை குடியரசுத் தலைவர், சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், “எனது பெயரைக் கூறி அழைத்து பேசியது”, மகிழ்ச்சியாக இருந்தது.

பாரத மக்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

இப்பொழுது இருக்கும் தேசப்பற்றை, அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும். குழந்தைகளுக்கு நமது வரலாற்றை சொல்லிக் கொடுக்க வேண்டும். அது நமது கடமை. நாம் அவர்களுக்கு இதை எடுத்துக் கூற வேண்டும்.

உங்கள் மகளின் பெயர் என்ன?

பவ கீர்த்தி, மகள் பிறந்து 15 நாளில் எனக்கு ‘கீர்த்தி சக்ரா’ விருது அறிவித்தார்கள், அந்தப் பெயரை எனது மகளுக்கும் வைத்து விட்டோம்.

கீர்த்தி சக்ரா விருது அறிவித்த பின்பு, யார் உங்களுக்கு தகவல் சொன்னது?

ஆன்லைன், கூகுளில் அறிவித்தார்கள். சுதந்திர தினத்திற்கு ஒரு நாள்
முன்பு 7 அல்லது 8 மணி வாக்கில் அறிவித்தார்கள்.

கீர்த்தி சக்ரா விருது அறிவித்த பொழுது யாரிடம் முதலில் கூறினீர்கள்?

மனைவியிடம் தெரிவித்தேன் ஆனால் அவர்களுக்கு அதுபற்றி எதுவும் தெரியவில்லை. அவர்களுக்கு விளக்கிக் கூறினேன். பிறகு உறவினர்கள், ஊர்மக்கள், பிஜேபி மாவட்ட செயலாளர் மற்றும் தொகுதி எம்.பி வந்து பார்தார். அதன்பிறகு தான் நாங்கள் அந்த விருது குறித்து பேச ஆரம்பித்தோம். உங்கள் பெருமை என்றென்றும் நிலைத்து இருக்கும். நீங்கள் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அதிக இளைஞர்களை தயார் செய்ய வேண்டும். உங்களைப் போன்றவர்கள் இளைஞர்களை உத்வேகம் செய்ய வேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்…

நன்றி வணக்கம்.

முற்றும்…
பேட்டி எடுத்தவர்: ரஞ்சித்