தலையங்கம்

மிரட்டல் பலிக்காது

கடந்த ஆண்டு (2025) அமெரிக்காவில் பிறந்த குழந்தைகள் மொத்தம் 36 லட்சம்; மற்ற நாடுகளிலிருந்து வந்து போகிறவர்கள் ஓராண்டில் பெற்ற குழந்தைகள் 20,000த்திலிருந்து 26,000 வரைதான். ஆனாலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஓர் ஆணை பிறப்பித்து அமெரிக்காவில் பிறந்தவர்களுக்கு அமெரிக்க குடியுரிமை உண்டு என்ற 150 வருட மரபுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றார். சென்ற வாரம் அமெரிக்க உச்சநீதிமன்றம் இந்த ஆணை செல்லாது என்று தீர்ப்பளித்து விட்டது. அமெரிக்காவில் பணிபுரியும் லட்சக்கணக்கான பாரத வம்சாவளியினர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். பொறாமையால் பாரதத்திற்கு விரோதமாக ஏதாவது செய்து டிரம்ப் மூக்குடைபடுவது இது முதல் முறையல்ல. இறக்குமதி தீர்வைக்கு அநியாயமாக வரி ஏற்றி, பாரதத்தை மிரட்டி விடலாம் என்று டிரம்ப் ஒரு வருட காலம் வரை உலகப் பொருளாதாரத்தை வறுத்து எடுத்து விட்டார். பிப்ரவரியில் அமெரிக்க உச்சநீதிமன்றம் அந்த எடுத்தேன், கவிழ்த்தேன் வரி ஏற்றத்தை அடித்துத் தள்ளியது நினைவிருக்கும். இதற்கிடையில் அமெரிக்காவிற்கு வர விரும்பும் கர்ப்பவதி பெண்களுக்கு விசா கிடையாது என்ற அடுத்த நகர்வுக்கு டிரம்ப் தயாராவதாக பேச்சு அடிபடுகிறது. சட்டவிரோத குடியேறிகளால் உலகின் பல நாடுகள் பிரச்சினைகளின் முற்றுகையில் சிக்கித் தவிப்பதைப் பார்த்து, அந்த அவலத்திலிருந்து அமெரிக்காவைக் காப்பாற்ற டிரம்ப் முயற்சி செய்தால் நல்லது.

முக்கியமான அறிக்கை

“ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயத்திற்கும் மரியாதை, நம்பிக்கை, பக்தி ஆகியவற்றின் மையமாக உருவாகியுள்ளது அயோத்தி ராமர் கோயில்; அங்கு நடந்த துரதிர்ஷ்டவசமான திருட்டுச் சம்பவம், ஒட்டுமொத்த சமுதாயத்தின், ராமபக்தர்களின் உணர்வுகளையும், நம்பிக்கையையும் ஆழமாகப் புண்படுத்தியுள்ளது; இந்த நிகழ்வால் நாம் அனைவரும் மிகுந்த வேதனையும், கோபமும் அடைந்துள்ளோம். ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் வற்புறுத்தலின் பேரில், உத்தரப்பிரதேச அரசு ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்து, அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியது. விசாரணைக்குப் பிறகு குற்றவாளி எனக் கண்டறியப்படும் எவரும் கடுமையான தண்டனையை எதிர்கொள்வதை உறுதி செய்வது அவசியம்.”