இரண்டு மாநிலங்களில் சங்கப்பணி செய்த ராமானந்த சர்மா ஜி

ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும் அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, சங்கப் பணியும் செய்து, சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும் திறம்பட நடத்தி, சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட, ராமானந்த சர்மா ஜியைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…

துர்கா சர்மா − சுந்தராம்பாள் தம்பதியினருக்கு மகனாக, 1923 ஆம் ஆண்டில் தற்போதைய ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பெத்தபுரத்தில் பிறந்தார், ராமானந்த சர்மா ஜி. தனது இளமைக் காலத்தை பெத்தபுரத்திலே கழித்த ராமானந்த சர்மா ஜி, அங்கேயே தனது படிப்பை முடித்தார்.
பெத்தபுரத்தில் இருந்து வடசென்னையில் உள்ள தண்டையார் பேட்டைக்கு, 1952 ஆம் ஆண்டில் தொழில் நிமித்தமாக மாற்றலாகி வந்தார். பிரபல எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலைக்கு சேர்ந்தார்.
பெத்தபுரத்தில் இருந்த போதே சங்க அறிமுகமானதால், தினமும் ஷாகா செல்வதை வழக்கமாகக் கொண்டு இருந்தார். 1948 ஆம் ஆண்டில், சங்கம் தடை செய்யப்பட்டபோது, அதனை எதிர்த்து கடுமையாகப் போராடினார், அதற்கு பரிசாக அன்றைய ஆட்சியாளர்கள் சிறையில் அடைத்தனர்.
சங்கத்தின் மீதான தடை நீக்கப்பட்டு, சிறையில் இருந்து வெளியே வந்தபோது, சங்கத்தின் மீதான அவரது மதிப்பு மேலும் அதிகரித்தது. அதனுடைய வெளிப்பாடாக, 1952 ஆம் ஆண்டில் சென்னை தண்டையார் பேட்டைக்கு குடியேறிய போதும், சங்கப் பணியை தொடர்ந்து மகிழ்ச்சியாக செய்தார்.
சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்த பின்னர், 1980 ஆம் ஆண்டு விசுவ ஹிந்து பரிஷத்தின் சென்னை மாநகர செயலாளராக இருந்தார். அப்போது தண்டையார் பேட்டையில் உள்ள பிரபல கல்லூரியான சர் தியாகராயா கல்லூரியில், ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை சொற்பொழிவாக நிகழ்த்த ஏற்பாடுகள் செய்தார். தொடர்ந்து பல இடங்களில், பலமுறை சுற்றுவட்டாரப் பகுதியில் சொற்பொழிவு நடத்தப்பட்டதால், பலருக்கும் நம்முடைய இதிகாசங்களைப் பற்றிய தெளிவு கிடைத்ததுடன், அதனை அறிந்து, புரிந்துகொள்ள நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது.
பரமபூஜனீய ஸ்ரீகுருஜி எழுதிய “வாழ்வே வேள்வி” (Bunch of Thoughts) புத்தகத்தை, பத்து முறைக்கும் மேல் தன்னுடைய வாழ்நாளில் படித்து உள்ளார். அதனை ஒவ்வொரு முறையும் படிப்பதன் மூலம், அதிகப்படியான சங்க வேலை செய்ய உத்வேகம் பெற்றதாக உணர்வார்.
எந்த ஒரு சூழ்நிலையிலும், தினசரி ஷாகா செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 1999 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 8ம் நாள் இரவில் அவரது மனைவி கிருஷ்ணவேணி தேவி அம்மாள் காலமான போது, அந்த நிலையிலும் அதற்கு அடுத்த நாள் காலை பிரபாத் ஷாகாவிற்கு சென்றார். இதனைக் கண்ட மற்ற ஸ்வயம்சேவகர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
தினசரி பத்திரிகை படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த ராமானந்த சர்மா ஜி, பத்திரிகைகளில் சங்கத்தை பற்றி வரும் நல்ல செய்திகளுக்கு ஆதரவாகவும், சங்கத்தைப் பற்றி ஏதேனும் தவறான செய்திகள் வந்தால், சங்கப் பிரச்சாரகர் ஸ்ரீ சூரி ஜியிடம் சொல்லி, அவரது வழிகாட்டுதலில் குறிப்பிட்ட அந்த பத்திரிகைக்கு, தன்னுடைய கண்டன கடிதங்கள் எழுதுவதை வழக்கமாகக் கொண்டவர். இதனால் அந்த பத்திரிக்கைக்கும், எழுதிய பத்திரிகையாளருக்கும் சங்கத்தை பற்றிய நல்லவிதமான புரிதல் ஏற்பட்டது.
இந்து முன்னணி தொடங்கப்பட்ட போது, தெருமுனைக் கூட்டங்கள் மற்றும் வீதி பிரச்சாரங்கள் நடத்தி, அந்த அமைப்பை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல அரும்பாடுபட்டார். குழந்தைகள் மத்தியில் நமது சிந்தனையை வளர்க்கும் நோக்கில், தண்டையார்பேட்டையில் பள்ளிக்கூடம் தொடங்கினார். பின்னர் அது விவேகானந்தா கல்வி குழுமத்துடன் இணைக்கப்பட்டது. பரமபூஜனீய ஸ்ரீ குருஜியை சந்தித்து உள்ளார்.
முன்னாள் பிரதமரான வாஜ்பாய் ஜி, துணை பிரதமரான அத்வானி ஜியை பலமுறை சந்தித்து உரையாற்றி உள்ளார். அவர்களுடைய வழிகாட்டுதலில் ஜன சங்கம், பாரதிய ஜனதா கட்சியின் பணிகளையும் செய்து உள்ளார்.
1942ல், கிருஷ்ணவேணி தேவி அவர்களை திருமணம் செய்த ராமானந்த சர்மா ஜிக்கு 4 மகன்கள் இருந்தனர். தந்தை வழியில் நான்கு பேரும் சங்கப் பொறுப்பேற்று பணி செய்தனர். இந்திரா காந்தி அமல்படுத்திய கொடூர சட்டமான எமர்ஜென்சியின் போது, ராமானந்த சர்மா ஜியின் மூத்த மகன் வி.என்.என். பிரசாத் அவர்கள் அப்போதைய ஆந்திராவில் இருந்த ராஜமுந்திரியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இரண்டாவது மகன் வி.டி.எஸ். பிரசாத் அவர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். மூன்றாவது மகன் வி. ஸ்ரீநிவாஸ் அவர்கள், இரண்டாம் ஆண்டு சங்கப் பயிற்சி முடித்தவர், சென்னை மஹாநகர் பொறுப்பில் இருந்தவர். இந்த மூன்று பேரும் தற்போது நம்மிடம் இல்லை.
ராமானந்த சர்மா ஜியின் நான்காவது மகன் வி. யுகேந்தர் ஜியும், இரண்டாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை முடித்து உள்ளார், தற்போது சங்கப் பொறுப்பு வகித்து வருகிறார்.
சங்கத்தின் மூத்த பிரச்சாரக்குகளான சிவராம் ஜி, பீஷ்மா ஜி போன்றோர் ராமானந்த சர்மா ஜியின் வீட்டில் தங்கி உள்ளனர். சங்கத்தின் மூத்த அதிகாரிகள், ஷேத்ர, பிராந்த அதிகாரிகள் என பலரும் ஜியின் வீட்டிற்கு வருகை புரிந்து உணவருந்தி, தங்கி உள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி, இந்து முன்னணி, ஜனங்கம், பாரதிய ஜனதா கட்சி வளர அரும்பாடுபட்டு, சிறைக்கு சென்றாலும் தளராது தொடர்ந்து சங்கப்பணி செய்து, தனது குடும்பத்தையும், சமுதாயத்தில் பலரையும் சங்க மயமாக்கிய ராமானந்த சர்மா ஜி, 2005 ஆம் ஆண்டு தனது 82வது வயதில் காலமானார். அவர் நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.

 

அ. ஓம்பிரகாஷ்