புதிய அத்தியாயத்தின் பன்னிரண்டு ஆண்டுகள்

ஒரு தேநீர் விற்பனையாளரின் மகன், தொடர்ந்து மிக நீண்ட காலம் பதவி வகித்த பாரத பிரதமர்களில் ஒருவராக உயர்வார் என்று யார் நினைத்திருப்பார்கள்? அரசியலில் சில பயணங்கள் வெறும் தேர்தல் வெற்றிகளால் மட்டுமே அளவிடப்படுவதில்லை; அவை ஒரு நாட்டின் மனநிலையையே மாற்றும் கதைகளாக மாறுகின்றன. வாழ்க்கையில் சில ஆண்டுகள் சாதாரண காலண்டர் பக்கங்களாகக் கடந்து போகின்றன, சில ஆண்டுகள் மட்டும் வரலாற்றின் திசையை மாற்றும் திருப்புமுனைகளாக மாறுகின்றன.
2014 முதல் 2026 வரையிலான பாரதத்தின் பயணம் அத்தகைய ஒரு கதையாகும். உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக உயர்ந்த பாரதம், டிஜிட்டல் புரட்சியின் முன்னணி நாடாக மாறியது. கோடிக்கணக்கான மக்களை வங்கிச் சேவைக்குள் கொண்டு வந்தது. உலக அரங்கில் தனது குரலை மேலும் வலிமையாக ஒலிக்கச் செய்தது.
இந்த மாற்றங்களின் பின்னணியில் இருந்தது வெறும் நிர்வாகத் தீர்மானங்களோ, திட்டங்களோ அல்ல; “சேவை வழியே வளர்ச்சி” என்ற சிந்தனையை ஆட்சியின் மையமாக மாற்ற முயன்ற ஒரு தலைமையின் கதை. அந்தக் கதையின் மையத்தில் நிற்பவர் பாரத பிரதமர் நரேந்திர மோடி.
இந்தப் பயணத்தின் அடித்தளமாக இருந்தது, அனைவரையும் சென்றடையும் வளர்ச்சி. பதவியேற்ற சில மாதங்களிலேயே தொடங்கப்பட்ட “ஜன்தன் யோஜனா”, கோடிக்கணக்கான மக்களை முறையான வங்கிச் சேவைக்குள் கொண்டு வந்தது. ஒரே வாரத்தில் 1.8 கோடிக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டு, உலக சாதனை படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேரடி நிதி பரிமாற்றத் திட்டங்கள் மூலம், ₹50 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை இடைத்தரகர்கள் இன்றி, மக்களின் வங்கிக் கணக்குகளுக்கே சென்றடைந்தது. நலத்திட்டங்கள் அறிவிப்புகளாக மட்டுமல்லாமல், மக்களின் வாழ்க்கையில் உணரக்கூடிய மாற்றங்களாக மாறின.
சுகாதாரத் துறையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் நிகழ்ந்தன. “ஆயுஷ்மான் பாரத்” உலகின் மிகப்பெரிய அரசு ஆதரவு சுகாதாரப் பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்றாக உருவெடுத்தது. தடுப்பூசி பாதுகாப்பு விகிதம் 62 சதவீதத்திலிருந்து 98.4 சதவீதமாக உயர்ந்தது. “உஜ்வாலா திட்டம்” மூலம் கோடிக்கணக்கான பெண்கள் புகையில்லாத சமையலறையின் வசதியைப் பெற்றனர். வளர்ச்சி என்பது வெறும் பொருளாதார எண்ணிக்கைகளில் மட்டுமல்ல; மக்களின் வாழ்க்கைத் தரத்தில் நிகழும் மாற்றங்களிலும் இருக்கிறது என்பதை இந்தத் திட்டங்கள் நிரூபித்தன.
பொருளாதாரத் துறையில் பாரதம் புதிய அடையாளத்தைப் பெற்றது. ஜி.எஸ்.டி மூலம் நாடு ஒருங்கிணைந்த சந்தையாக மாறியது. இன்று ஜி.எஸ்.டி வருவாய் ₹22 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. உலகின் மிகப்பெரிய நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனை அமைப்பாக யு.பி.ஐ வளர்ந்துள்ளது. உலகின் மொத்த நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் கிட்டத்தட்ட பாதி பாரதத்தில் நடைபெறுகிறது என்பது இந்த மாற்றத்தின் அளவை உணர்த்துகிறது.
இந்த வளர்ச்சியின் தாக்கம் பொருளாதாரக் குறியீடுகளில் மட்டுமல்ல, சமூக மாற்றங்களிலும் பிரதிபலித்தது. பல்வேறு ஆய்வுகளின்படி, கடந்த 12 ஆண்டுகளில் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் பலபரிமாண வறுமையிலிருந்து வெளியேறியுள்ளனர். ஒருகாலத்தில் அரசு நலத்திட்டங்களின் பலன்கள், போகும் வழியிலேயே கசிந்து விடுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில், இன்று தொழில்நுட்பத்தின் உதவியுடன் நேரடியாக பயனாளிகளை சென்றடைகின்றன. வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாகத் திறன் இணைந்தால், எத்தகைய மாற்றம் சாத்தியம் என்பதை இது காட்டுகிறது.
2014ல் வெறும் நான்கு யூனிகார்ன்களைக் கொண்டிருந்த நாடு, இன்று நூற்றுக்கும் மேற்பட்ட யூனிகார்ன்களையும், உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்-அப் சூழலையும் கொண்டுள்ளது. 2 லட்சத்திற்கும் அதிகமான அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்-அப்கள் வரை வளர்ந்திருப்பது, இளைஞர்களின் புதுமை திறனுக்குக் கிடைத்த புதிய வாய்ப்புகளை வெளிப்படுத்துகிறது.
உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளும் இந்த மாற்றப் பயணத்தின் முக்கிய அத்தியாயங்களாக அமைந்தன. மொபைல் போன் உற்பத்தி மதிப்பு 28 மடங்கு உயர்ந்து, உலகின் முன்னணி மொபைல் உற்பத்தி மையங்களில் ஒன்றாக உருவெடுத்தது. ஒருகாலத்தில் இறக்குமதியைச் சார்ந்திருந்த நாடு, இன்று உலக சந்தைகளுக்கு மொபைல் போன்களை ஏற்றுமதி செய்யும் சக்தியாக மாறியுள்ளது. சாலைகள், ரயில்கள், விமான நிலையங்கள், டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் நடைபெற்ற முதலீடுகள், வளர்ச்சியின் பலன்களை நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் கொண்டு செல்ல உதவின.
தேசியப் பாதுகாப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிலும் இந்த காலகட்டம் முக்கிய திருப்புமுனைகளை கண்டது. 2016 சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், பாதுகாப்பு அணுகுமுறையில் புதிய தன்னம்பிக்கையை வெளிப்படுத்தியது. 370 நீக்கம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கின் முழுமையான ஒருங்கிணைப்பு, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம், பல தசாப்தங்களாக தேசிய விவாதங்களில் இடம்பெற்ற கேள்விகளுக்கு புதிய பதில்களை வழங்கின.
பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம், ஜி20 தலைமைப் பொறுப்பு, காலநிலை மாற்றம் ஆகியவை நமது சர்வதேச செல்வாக்கை புதிய உயரங்களுக்கு கொண்டு சென்றன. பல உலகளாவிய விவாதங்களின் திசையை தீர்மானிக்கும் முக்கிய சக்திகளில் ஒன்றாக பாரதம் உருவெடுத்துள்ளது.
இந்த வளர்ச்சிப் பயணம் சுற்றுச்சூழலை புறக்கணிக்கவில்லை. 2014ல், வெறும் 2.82 GW ஆக இருந்த சூரிய மின்சக்தி திறன், 2026ல் 150 GW ஆக உயர்ந்துள்ளது. எத்தனால் கலவை, பசுமை ஹைட்ரஜன், மின்சார வாகனங்கள், புலிகள் பாதுகாப்பு, மரங்கள் நடும் இயக்கங்கள் போன்ற முயற்சிகள், வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பொறுப்புக்கும் இடையே சமநிலையை உருவாக்கும் பாரதத்தின் முயற்சியை வெளிப்படுத்துகின்றன.
2014 முதல் 2026 வரையிலான இந்த 12 ஆண்டுகள், பாரதம் தனது எதிர்காலத்தைப் பற்றி கனவு கண்ட காலம் மட்டுமல்ல; அந்தக் கனவுகளை நனவாக்கத் தொடங்கிய காலமாகவும் வரலாற்றில் பதிவு செய்யப்படும், எழுச்சிக் காலமாகவே வரலாற்றில் நிலைத்திருக்கும். இந்தப் பயணத்தை வெறும் புள்ளிவிவரங்களின் தொகுப்பாகப் பார்க்க முடியாது. முதன்முறையாக வங்கிக் கணக்கு பெற்ற ஒரு ஏழை குடும்பத்தின் நம்பிக்கையிலும், புகையில்லா சமையலறையைப் பெற்ற ஒரு தாயின் நிம்மதியிலும், உலகத் தரத்திலான வாய்ப்புகளை கனவு காணும் ஒரு இளைஞனின் தன்னம்பிக்கையிலும் பிரதிபலிக்கிறது. ஒரு காலத்தில் எதிர்காலத்தைப் பற்றி கேள்வி எழுப்பிய பாரதம், இன்று எதிர்காலத்தை வடிவமைக்கும் உலகின் குருவாக மாறி வருகிறது.

கட்டுரையாளர்: மருத்துவர் சுபா