ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும் அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, விவசாயப் பணியும் செய்து சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும் திறம்பட நடத்தி, சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட, வரதராஜன் ஜியைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…
ரங்கசாமி −- ஜானகி தம்பதியினருக்கு மகனாக 1960 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் தேதி, கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் தாலுகா மணவாசியில் பிறந்தார், வரதராஜன் ஜி. அவரது தந்தை மாநில நீதித்துறையின் அலுவலகப் பணியில் (சிரஸ்ததார்) இருந்ததால், பல ஊர்களுக்கு மாறுதல் ஏற்படும், அதனால் தாயார் ஜானகி அம்மாள் குடும்பப் பொறுப்பை கவனித்து கொண்டார்.
வரதராஜன் ஜிக்கு மூன்று அண்ணன்கள் – விஜயராகவன் ஜி, பத்மநாபன் ஜி, ஸ்ரீதரன் ஜி மற்றும் ஒரு அக்கா பிரேமா ஜி. இதில் விஜயராகவன் ஜி மற்றும் பத்மநாபன் ஜியும் ஸ்வயம்சேவக்காக இருந்துள்ளனர். 1970 ஆம் ஆண்டு முதல் பத்மநாபன் ஜி, சங்கப் பிரச்சாரக்காக இருந்தவர். அவர் காரைக்குடி அழகப்பா கல்லூரியில், எலெக்ட்ரிகல் இஞ்சினீயரிங் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, 1970 ஆம் ஆண்டு முதல் சங்க பிரச்சாரக்காக செயல்பட்டவர். முதலில் சென்னை பிறகு சேலம் மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் முழுநேரமாக சங்கப் பணியை செய்தவர் சேலம், கோவை கோட்டம் இணைந்த சம்பாஹ் பிரச்சாரக்காக சங்கப் பணியை செய்தார். அதனைத் தொடர்ந்து பிராந்த வ்யவஸ்தா பிரமுக், பிராந்த கோஷ் பிரமுக் பொறுப்பில் இருந்தார். 1984 ஆம் ஆண்டு, பத்மநாபன் ஜி காலமானார்.
விவரம் தெரியாத வயதில், புதுக்கோட்டையில் நடைபெற்று வந்த ஷாகாவில் அண்ணன் பத்மநாபன் ஜி மூலமாக சங்கத்திற்கு அறிமுகம் ஆனார் வரதராஜன் ஜி. மூன்றாம் வகுப்பு வரை புதுக்கோட்டையில் படித்த பின்னர், நான்கு முதல் எட்டாம் வகுப்பு வரை, திருச்சியில் உள்ள லிட்டில் பிளவர் கான்வென்டில் படித்தார்.
அதனைத் தொடர்ந்து, திருச்சி நேஷனல் ஹை ஸ்கூலில் ஒன்பதாவது முதல் பதினோராம் வகுப்பு வரை படித்தார்.
அதன் பிறகு, பி.யு.சி படிப்பை திருச்சி நேஷனல் கல்லூரியில் படித்தார். அதே கல்லூரியில் வேதியியல் படிப்பில் இளங்கலை (B.Sc. Chemistry) பட்டம் பெற்றார்.
1975 ஆம் ஆண்டில் முக்ய சிக்ஷக், திருச்சி நகர், தாலுகா மற்றும் திருச்சி ஜில்லா அளவில் பௌத்திக் பிரமுக், ஷாரீரிக் பிரமுக், வித்யார்த்தி பிரமுக் என பல்வேறு பொறுப்புகளில் சங்கப்பணி செய்தார். 1987 ஆம் ஆண்டு, ஆந்திரப் பிரதேசத்திலுள்ள தெனாலியில் நடைபெற்ற த்விதீய வர்ஷ சங்க சிக்ஷ வர்கவில் பதவின்யாஸ் மற்றும் யோகசாப் சிக்ஷக்காக இருந்துள்ளார்.
1986 முதல் 1993 வரை திருச்சி ஜில்லா கார்யவாஹ், 1996 முதல் 2001 வரை பாரதிய ஜனதா கட்சியின் ஸ்ரீரங்கம் மண்டல் தலைவர், 2001 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியின் துணைப் பொறுப்பாளர், 2003 முதல் 2007 வரை பாரத் விகாஸ் பரிஷத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்தார்.
2007-−2009ல், சங்கத்தின் தென் தமிழக சஹ கோஷ் ப்ரமுக் மற்றும் பிராந்த கோஷ் ப்ரமுக், 2009 முதல் திருச்சி ஜில்லா குடும்ப பிரபோதன் ப்ரமுக், 2021 முதல் ஸ்வதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் அகில பாரத பொதுக்குழு உறுப்பினர் என பல பொறுப்புகளில் இருந்துள்ளார்.
“பாரத நாடு துண்டாடப்பட்ட வரலாறு” புத்தகத்தின் சில அத்தியாயங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்துள்ளார். நாமக்கல்லில் நடைபெற்ற ஷிபிரில் அப்போதைய அகில பாரத தலைவராக இருந்த
சுதர்சன் ஜியின் பௌத்திக் மற்றும் கேள்வி – பதில் தொகுப்பு புத்தகத்தை “தினசரித் தவம்” என்ற தலைப்பில், தமிழாக்கம் செய்தார்.
ஸ்வதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் சதீஷ்குமார் ஜி மற்றும் பேராசிரியர் ராஜ்குமார் மித்தல் ஜி ஆகியோர் எழுதிய ஆங்கிலக் கட்டுரைத் தொகுப்பை தமிழில் “உன்னத பாரதத்தை புனரமைத்தல்” என்ற பெயரில், 2023ல் தமிழாக்கம் செய்தார்.
1990 ஆம் ஆண்டு, அயோத்தியில் நடைபெற்ற கரசேவையில் கலந்து கொள்வதற்காக திருச்சி கோட்டத்தில் இருந்து புறப்பட்ட 74 நபர்கள் கொண்ட குழுவின் ‘வாஹினி ப்ரமுக்’ பொறுப்பை திறம்பட செய்தார். 2024 ஆம் ஆண்டு, அயோத்தியில் நடைபெற்ற “ப்ராண ப்ரதிஷ்டை” நிகழ்வுக்காக, தென் தமிழகத்திலிருந்து சென்ற 56 சன்யாசிகளுக்கான பணிகளை கவனித்த “ஸந்த் ஸேவா” குழுவின் உறுப்பினராக இருந்தார்.
1975ல், முதலாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை திருப்பராய்த்துறையிலும், 1978ல், இரண்டம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை சேலம் வித்யா மந்திர் பள்ளியிலும், 1986ல், மூன்றாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை நாகபுரியிலும் முடித்தார்.
1989 ஆகஸ்ட் மாதம் 21ல், விஜயா அம்மாளை திருமணம் செய்த வரதராஜன் ஜிக்கு சுதர்ஷன் ஜி, பத்ரி நாராயணன் ஜி என இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சுதர்ஷன் ஜி, முதலாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை முடித்துள்ளார், தற்போது வெளிநாட்டில் உள்ளார். இரண்டாவது மகன் பத்ரி நாராயணன் ஜி, இரண்டம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாம் முடித்துள்ளார். சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர், தற்போது சென்னையில் வழக்கறிஞர் தொழில் செய்து வருகிறார்.
சங்கம் வழிகாட்டிய அமைப்புகளில், பல்வேறு பொறுப்புகளில் பணி செய்து, தமிழ் மொழியில் புத்தகங்கள் மொழி மாற்றம் செய்த வரதராஜன் ஜி, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.
அ.ஓம்பிரகாஷ்