ஏப்ரல் 23 அன்று தமிழர்கள், ஹிந்து விரோத திமுகவை புறக்கணித்தது மட்டுமல்லாமல் ஹிந்துக்களுடனான உறவு விஷயத்தில் அவ்வப்போது சந்தேகத்துக்கிடமான விதத்தில் பேசி நடந்து கொள்ளும் அதிமுகவுக்கும் பாடம் புகட்டியிருக்கிறார்கள். மே 23 அன்று எழுதப்படும் இந்த தலையங்கத்தில் இதை குறிப்பாக நினைவூட்டுவானேன்?
கழகங்கள் இல்லாத தமிழகம் காண்போம் என்று அரசியலில் இயங்கும் சகோதரர்கள் ஆசைப்பட்டது 2026 சட்டமன்றத் தேர்தலில் பிசிறு இல்லாமல் நிறைவேறியிருக்கிறது என்ற ஊக்கமூட்டும் தகவலை ஒரு முறை உரக்கச் சொல்வது தான் நோக்கம். புதிய அரசின் ஆட்சிக்காலம் முழுவதும் அனைவரது இந்த ஊக்கமே, சனாதன ஹிந்து சமுதாய நலன்களை காக்கும் கேடயமும், வாளும். அது மழுங்காமல் பார்த்துக் கொள்வோம்.
முதல் மாதம் முடிவதற்குள்ளாகவே, ஹிந்து சமுதாய, சமய, கலாச்சார நலனுக்கும், ஹிந்து ஒற்றுமைக்கும் உலை வைக்கும் விதத்தில் அடுக்கடுக்காக காட்சிகளை சில சக்திகள் அரங்கேற்றிப் பார்க்கிறார்கள். தாங்கள் எந்த பீடத்துக்கு விசுவாசமாக இருக்கிறார்களோ அதற்கு பிடிக்கும் விதத்தில் தங்கள் மீது லேபிள் ஒட்டிக் கொள்ள இந்த தர்பாரில் உள்ளவர்கள் ஆசைப்படலாம். ஆனால், வங்காளத்திலும், அஸ்ஸாமிலும் மட்டுமல்ல, தமிழகத்திலும் ஹிந்து (தமிழர்) வாக்குகளே பிரிவினைவாத சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளை இந்த நிலைமைக்கு கொண்டு வந்திருக்கின்றன என்பதை மறக்காமல் புதிய அரசு நடந்து கொள்ள வேண்டும். இந்த அரசுக்கு மீதமுள்ள ஆட்சிக் காலம் நாலு ஆண்டுகளும் 11 மாதங்களும் மட்டுமே. அதற்குள் நல்லாட்சி தந்தோம் என்ற நற்பெயர் பெற மட்டும் இந்த அரசு முயற்சிக்கட்டும்.
அடுத்த வாரம் பாரதத் தலைநகர் டெல்லிக்கு தமிழக முதல்வர் விஜய் செல்ல இருக்கிறார். பாரதத்தின் எல்லை நெடுக எல்லா எல்லை மாநில அரசுகளும் மத்திய அரசுடன் எல்லை பாதுகாப்பு விஷயத்தில் வெகு இணக்கமாக செயல்படுவது தேசத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்புக்கு உறுதுணை புரிகிறது. தமிழகமும் எல்லை மாநிலமே. தமிழக கடற்கரை முழுதும் சர்வதேச எல்லை தான். எனவே பாரதத்தின் அபார வளர்ச்சி வேகம் கண்டு பாரதத்தை குறி வைக்கும் மிரட்டல்கள் அதிகரித்து வருகிற இந்த தருணத்தில், தமிழக அரசும் பொறுப்புணர்ந்து எல்லை பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசுக்கு பரிபூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. முதல்வரின் டெல்லி பயணத்தின் போது முதல்வரும், உடன் செல்லும் அரசு அதிகாரிகளும், அங்கே சந்திக்கின்ற தேசிய தலைமையும் மத்திய அரசுடன் மற்ற மாநில அரசுகளின் இணக்கமான முன்னுதாரணமும் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் என நம்பலாம்.