வார்த்தையும், செயலும் பிணைப்பை வலுப்படுத்த வேண்டும் – மோகன் பாகவத்

ர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் மோகன் ஜி பாகவத், கர்நாடகாவில் உள்ள மைசூரு ஜே.எஸ்.எஸ் மகா வித்யாபீடத்தில் மே மாதம் 7ம் தேதி தேசிய மேம்பாட்டுக்கு உந்துசக்தி அளிக்கும் சமூக நல்லிணக்கம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:
நம் பாரதிய மொழிகளில் உள்ள வார்த்தைகளை அப்படியே ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது சாத்தியமல்ல. பொருளை முழுமையாக பிரதிபலிக்கிறது என்று கூற முடியாது.
முதலாவதாக, சமூகம் என்பதை எடுத்துக் கொள்வோம். நாம் சமாஜ் என்று இதை குறிப்பிடுகிறோம். கர்நாடகாவில் இதை `சமுதாயி’ என்று குறிப்பிடுகிறார்கள். நமது சமாஜ் கோட்பாடும், மேற்கத்திய சமூக கோட்பாடும் வெவ்வேறானவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
`சமூகம்’ என்பது மக்கள் திரளைக் குறிப்பிடுகிறது. ஆனால் `சமாஜ்’ என்பது விரிவான, விசாலமான கண்ணோட்டத்தை பிரதிபலிக்கிறது. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் நெடுங்காலமாக ஒருங்கிணைந்து வாழ்பவர்களையே `சமாஜ்’ என்ற சொல்லின் வாயிலாக குறிப்பிடுகிறோம். இங்கு ஒற்றுமை என்பது இயல்பாகவே ஏற்பட்டு விடுகிறது. அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் நானும், என் குடும்பமும் வாழ வேண்டும். இதையும் தாண்டி மற்றவர்களும் இவ்வாறே வாழ வேண்டும். சுவாமி விவேகானந்தர், ஒவ்வொரு தேசமும் ஒரு செய்தியை அளிக்கிறது, ஒரு லட்சியத்தை முன்னெடுத்து செல்கிறது என்று குறிப்பிட்டது முற்றிலும் ஏற்புடையதே. நாடு என்றால் நிலம், மக்கள், அரசு என்ற அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். சாணக்கியரும் இதைத்தான் குறிப்பிடுகிறார். மேற்கத்திய உலகில் அரசு மட்டுமே முதன்மையானது. ஆனால், நம் நாட்டில் அரசு மட்டுமே முதன்மையானது என்று குறிப்பிட முடியாது. மக்களே தேசத்தின் உயிர் துடிப்பாக விளங்குகிறார்கள். பாரதத்தில் உள்ள பல மாநிலங்களை வெவ்வேறு ஆட்சியாளர்கள் ஆண்டுள்ளனர். ஆனால், இந்த தேசம் ஒன்றாகவே இருந்துள்ளது. மலைகளும், கடல்களும், இயற்கை அரண்களாக உள்ளன. யாரும் வெளியே இருந்து வந்து விட முடியாது. `பூமி’ என்பதை வெறும் நிலம் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. `மாத்ரு பூமி’ என்றால் தாய்நாடு என்று பொருள். காலங்காலமாக இதை நாம் நிரூபித்து வருகிறோம். நமது ஒற்றுமையை எந்த புற சக்தியாலும் அபகரித்து விட முடியாது. ஏழை, எளிய மக்கள், கல்வி அறிவு இல்லாத மக்கள் போன்றோரும் கூட, இதே பாதையில்தான் பயணிக்கிறார்கள். நாணயம் மக்களிடையே மேலோங்கியுள்ளது. இத்தகைய நம்பிக்கையை மேற்கத்திய நாடுகளில் பார்க்க முடியாது. நம் நாட்டில் சமூக ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளப்பட வில்லை. இதை நாம் கடமையாக கருதுகிறோம்.
வார்த்தையும், செயலும் மென்மையாக இருக்க வேண்டும். பிணைப்பை வலுப்படுத்த வேண்டும். யாரையும் காயப்படுத்தக் கூடாது. கடயனுக்கும், கடைத்தேற்றம் என்ற அடிப்படையில் நமது செயல்பாடு இருக்க வேண்டும். அனைவரும் நமது நண்பர்களே.
ஆத்மனோ மோக்ஸார்த்தம் ஜெகத் கிதயேஷ என்ற புத்தகத்தை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தும், சுட்டூர் ஷேத்திரத்தைச் சேர்ந்த ஸ்ரீசிவராத்திரி தேசியேந்திர மகாசுவாமி ஜியும் கூட்டாக வெளியிட்டனர்.
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து

யாரும் நம்மை அடிமைப்படுத்த முடியாது

உரை நிறைவடைந்த பிறகு விழாவில் பங்கேற்றவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மோகன் ஜி பாகவத் பதில் அளித்தார்.

எல்லா மதங்களும் ஒன்றுபடுவது சாத்தியமா?

இறுதி இலக்கு ஒன்றுதான். ஆனால் பாதைகள் வெவ்வேறானவை. சிலர் சீக்கிரம்
இலக்கை சென்று அடைந்து விடுவார்கள். மற்றவர்கள் இலக்கை அடைய சற்று தாமதமாகும். மதங்கள் இடையே, சமூகங்கள் இடையே நல்லிணக்கம் மேலோங்க வேண்டும். இல்லாவிட்டால், முரண்பாடுகள் அழிவை ஏற்படுத்தி விடும். நாம் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

இந்த அறிவியல் யுகத்தில் அதிகாரத்துக்கு, பதவிக்கு, உடைமைக்கு பலர் அடிமையாகி விடுகிறார்களே?

யாரும் நம்மை அடிமைப்படுத்த முடியாது. அடிமையாக இருக்க வேண்டுமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் அடிமைப்பட்டிருந்தால், வேறு எவரும் உங்களை விடுவிக்க முடியாது. நீங்கள் தான் உங்களை விடுவிக்க வேண்டும். விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் வித்தியாசம் உள்ளது. நாம் `தர்மம்’ என்று குறிப்பிடுவது மதத்தை அல்ல. அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய மேம்பாடுதான் தர்மம். நாம் விவேகமுடன் செயல்பட்டு நமது பாதை எது என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

தமிழில் : அடவி வணங்கி