இது தியாகமல்ல, நமது கடமை

ஈரான் – அமெரிக்கா போர் காரணமாக, ஹார்முஸ் நீரிணை பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் வழியாகவே பல நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி செல்லும் கப்பல்கள் செல்கின்றன, ஆனால் தற்போது இதன் வழியே பயணிக்க பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளன. ஈரான் நாட்டின் பொறுப்பற்ற தன்மையினால், பிற வளைகுடா நாடுகளிலும் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டால் திண்டாடி வருகின்றன. நமது அரசு மேற்கொண்ட சீரிய நடவடிக்கைகள் காரணமாக, ரஷ்யா உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்து எரிபொருள் வந்துக் கொண்டிருக்கிறது. 89 நாட்களுக்கான எரிபொருள் எப்போதும் நம் கைவசம் இருக்கிறது. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை, வீட்டு உபயோக சமையல் கேஸ் விநியோகம் பாதிப்பில்லை மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கவில்லை எனினும் பொருளாதார ரீதியாக சில சவால்கள் நம் நாட்டில் எழுந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் 50% அதிகரித்துள்ளது. அந்நிய நாட்டு பணத்தில்தான் இவற்றை நாம் வாங்க வேண்டியுள்ளது. நமது நாட்டில் போதுமான அளவு அந்நிய செலவாணி இருந்தாலும், தேவையற்ற செலவை தவிர்ப்பது நல்லது என பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள பிரதமர் சில வேண்டுகோள்களை விடுத்துள்ளார்.

வேண்டாம் வெளிநாட்டு சுற்றுலா
வெளிநாட்டு சுற்றுலாவை தவிர்த்து, நம் நாட்டில் உள்ள இடங்களுக்கு செல்வோம். இதனால், நமது பணம் நம் நாட்டு மக்களுக்கே கிடைக்கும்.

முடிந்தவரை பொது போக்குவரத்தை பயன்படுத்துவோம்

அவரவர் தொழில், சூழ்நிலையைப் பொறுத்து, சாத்தியப்படும் என்றால் கார், பைக் இவற்றுக்கு பதில் பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் போன்றவற்றை பயன்படுத்தலாம் .

போக்குவரத்து சிக்கனம்
வீட்டுக்கு அருகாமையில் உள்ள இடங்களுக்கு செல்ல வாகனத்தை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

சில உதாரணங்கள்

பிரதமர், மத்திய அமைச்சர்கள், பாஜக முதல்வர்கள் பலரும் தங்களது கான்வாய் வாகனங்களை, பெருமளவில் குறைத்து விட்டனர்.

டெல்லி, மஹாராஷ்டிரா மாநில அமைச்சர்கள் தங்கள் வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துள்ளனர்.

சில அமைச்சர்கள் மின்சார வாகனங்களுக்கு மாறியுள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் பேருந்து, ரயில் பயணத்திற்கு மாறியுள்ளனர்.
1965 பாகிஸ்தான் உடனான போர் ஒருபுறம், உணவு பஞ்சம் மறுபுறம் இருந்த போது, குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் தவிர்த்து மற்றவர்கள் ஒருவேளை உணவை விட்டுக் கொடுங்கள் என்று பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி விடுத்த வேண்டுகோளை பலர் மனமுவந்து ஏற்றனர். தற்போது நாம் உணவை துறக்க அவசியமில்லை, வீட்டிலேயே முடங்கி இருக்கவும் தேவையில்லை. சில பழக்கங்களை நாம் மாற்றிக் கொண்டாலே போதுமானது. இதனை நடைமுறைப்படுத்தும் போது, வரும் கஷ்டங்களை நாட்டு நலனை முன்னிறுத்தி, நாம் ஏற்க தான் வேண்டும். ஒரு பேரிடர் வந்தால், அதை எவ்வாறு சமாளிப்பது என்பதை பாரத நாட்டு மக்களை பார்த்து உலகம் கற்க வேண்டும், அதற்கேற்றவாறு அனைத்து மக்களும் நடக்க வேண்டும். இது தியாகம்
அல்ல, மக்களின் கடமை!