சமூக நல்லிணக்கத்தைப் பதிவு செய்த நாலடியார்

சங்க யுகத்தை அடுத்து பிறந்த அறனெறிக் காலத்தில் தோன்றிய கீழ்க்கணக்கு நூல்களுள், நீதி ஆசாரங்களை மையமாகக் கொண்டு பிறந்த 11 நூல்களுள் நாலடியாருக்கு சிறப்பிடம் உண்டு. உலக வாழ்வியலை சமுதாய ஒழுக்கத்தோடும், தனிமனித சிந்தனைகளை மேவியும் வாழ எடுத்துரைக்கும் நூல்களை அறநூல்கள் என்ற வகையுள் அடக்குவர். தனியுரிமை, பொருளுடைமை, சமூக ஆக்கத்தினால் உருவான மேல் கீழ் என்ற ஏற்றத்தாழ்வுகளையும், சுரண்டல் சமூகத்தை சீரமைக்கவுமே அறவியல் இலக்கிய வடிவமாகத் தோற்றம் பெற்றது. “அறம்” என்ற கருதுகோள் நாடுக்கு நாடு, இனத்திற்கு இனம் மாறினாலும், தமிழரின் அறக்கோட்பாடானது, ஒட்டுமொத்த மனித இனத்தின் செம்மை நிலையையே அடிநாதமாகக் கொண்டிருந்தது. அறத்தைப் பாடுபொருளாகக் கொண்ட நாலடியார், திருக்குறளுக்கு அடுத்ததாகப் பெரிதும் போற்றப்படும் கீழ்க்கணக்கு நூல். அடியால் பெயர் பெற்றது இதன் மற்றொரு சிறப்பு.
பஞ்சம் பிழைக்க வந்த 8000 சமண முனிவர்களுக்கு ஆதரவு கொடுத்த பாண்டிய மன்னனுக்கு, அவர்கள் மீண்டும் தம் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்தபோது, அனுப்பிவைக்க மனம் இடம்தரவில்லை. மன்னனின் விடை கிடைக்காததால், எண்ணாயிரமவரும் ஆளுக்கு ஒரு பாடல் எழுதிவைத்து, தம் நாடு திரும்பினர். இதையறிந்த அரசன், அவர்கள் பிரிவின் ஏக்கத்தாலும், சினத்தாலும், அத்தனை பாடல்களையும் வைகையாற்றில் வீசி எறிய கட்டளையிட அவ்வாறே செய்யப்பட்டது. அவற்றுள் 400 ஏடுகள் மட்டும் கரை ஒதுங்கின. அவற்றை மன்னர் தொகுக்கச் செய்தான் என இந்நூல் தோன்றிய வரலாற்றாக தனிப்பாடல் திரட்டு [“எண் பெரும் குன்றத்து எணாஅயிரம் இருடி பண் பொருந்தப் பாடிய பா நானூறும்”] கூறுகிறது.
அமைப்பிலும் திருக்குறளை ஒத்தே இந்நூல் உள்ளது. அறிஞர்கள் பெரும்பாலும் திருக்குறளின் கருத்துக்களோடு நாலடியாரை ஒப்பிட்டுப் பேசுவர். உண்மையில், நாலடியாரின் கருத்துக்களுள் வெறும் 12% மட்டுமே திருக்குறளோடு பொருந்துகின்றன. அரசன், போர், அரண், உளவு போன்ற எதைப் பற்றியும் நாலடியார் பேசவில்லை. நாலடியாரின் மூலக் கருத்து “நிலையாமை” பற்றியது. திருக்குறளில் 34ம் அதிகாரத்தில் மட்டுமே நிலையாமை பேசப்படுகிறது.
நாலடியார் இல்லற வாழ்வைக் காட்டிலும், துறவறத்தையே பெரிதாகப் போற்றுகிறது. திருக்குறளோ, இரண்டையும் சமமாகவே பார்ப்பதை, காமத்துப்பாலின் அமைப்பு விளக்கும். திருக்குறளில் மொத்தமாக 250 குறட்பாக்கள் காமத்துப்பாலைப் பற்றியது. ஆனால் நாலடியாரில் ஒரேயொரு இயல்தான் அதுபற்றி பேசுகின்றது.
முப்பாலும் [அறம், பொருள், இன்பம்] பத்து இயல்களும், நாற்பது அதிகாரங்களையும் கொண்டு விளங்கும் இந்நூல், திருக்குறளுக்கு அடுத்து அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல். எழுத்தாளர் முகம்மது யூசப் மலையாளத்திலும், ஜி.யு. போப், எஃப். ஜே. லிபர், ஸ்ரீராம தேசிகன், தினவர்த்தமானி, எல்லிஸ் வெங்கடசலம் முதலியோர் ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்துள்ளனர். இதுவன்றி பல ஆசிய மொழிகளிலும் ஐரோப்பிய மொழிகளிலும் இந்நூல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
குடும்பம், இல்வாழ்க்கை, விருந்தோம்பல், மக்கட்செல்வம், அன்பு, பண்பு, வாய்மை, வெகுளாமை, புலன் அடக்கம் போன்ற தனிமனித அறத்தைப் பற்றி பேசினாலும் கல்வி, அறிவுடைமை, ஈகை முதலிய சமூக அறத்தையும் இந்நூல் வலியுறுத்துகிறது. “நல்லறம் செய்பவர் எந்த நாட்டில் பிறந்திருந்தாலும் நற்கதி அடைவார்” (243) என்று கூறி, நேரடியாகவே சமூக நல்லிணக்கத்தைப் பதிவு செய்கிறது.
கி.பி. முதலாம் நூற்றாண்டை சேர்ந்த கிரேக்க ஸ்டாய்சிச தத்துவ அறிஞரான எபிக்டெட்டஸ் உறவு, உடைமை, வாழ்க்கை என அனைத்தும் நிலையாமையையே தழுவி இருக்கின்றது என்று உணர்வது மன அமைதிக்கும் விடுதலைக்கும் அவசியமானது என்பதைப் பருவக்கால கனிகளோடு ஒப்பிட்டு விளக்குகிறார். எப்படி அந்தந்தப் பருவத்தில் விளைகின்ற கனிகளை சுவைக்கின்றோமோ அதேபோல் வாழ்வின் அந்தந்தத் தருணங்கள் நிகழும் காலத்தே அனுபவித்து மீள வேண்டும் என்கிறார். நாலடியாரின் 29வது பாடலும் இதே போல் நிலையாமையைக் கூறி, அறம் செய்தலை வலியுறுத்தும். புல்லின் நுனியிலுள்ள பனித்துகள் போன்றது நம் உடம்பு; அதனால், அறம் செய்தலைக் காலம் தாழ்த்தாமல் உடனே செய்தல் வேண்டும் என்று கூறுகிறது.
ஸ்டாய்சிசக் கருத்துகளின் சத்து நாலடியாரில் காணப்பட்டாலும், காலங்காலமாக நமது மண்ணின் அங்கமான இம்மை, மறுமை பற்றிய கருத்துக்களையும் நாலடியார் கணிசமாக கூறுகிறது. உதாரணமாக, 95ம் பாடல் “இம்மையில் ஈயாமலிருந்தால் மறுமையில் உண்டி, உறை உட்பட அனைத்து வசதிகளும் இன்றி தவிப்பாய்” என்கிறது. இதில் மிகப்பெரிய உளவியல் கோட்பாடும் காணப்படுகிறது. பி.எஃப். ஸ்கின்னரின் ஆபரண்ட் கண்டிஷனிங் [OPERANT CONDITIONING] என்ற உளவியல் கோட்பாட்டின் சாரம் இங்கே வெளிப்படுகிறது. இந்தக் கோட்பாட்டில் எதிர்மறை தண்டைனைப் பற்றி ஸ்கின்னர் குறிப்பிட்டிருப்பார். ஒருவரிடமுள்ள வசதிகளைப் பறித்து, அதன்மூலம் அவரின் நடத்தையைச் சரி செய்வதுதான், எதிர்மறை தண்டனையின் நோக்கம். ஒரே பாடலில் இருவேறுபட்ட தத்துவக் கொள்கைகளை நாலடியார் மிக எளிமையாகக் கூறியுள்ளது.
நாலடியாரில் அதிகமாக உவமைகள் காணப்படுகின்றன. பாதிரிப்பூ, கள்ளிப்பூ, குவளை, அல்லி, காந்தள், விளாங்காய், ஆலம்பழ விதை, தேனீ, கழுகு, பனித்துளி, பாறை, பழுமரம், தெய்வங்கள், மனிதர்கள் எனச் சூழலிய உறுப்புகளை உவமைகளாகக் கொண்டு பல பாடல்கள் உள்ளன. இந்நூலின் 40% பாடல்கள் [160 பாடல்கள்] உவமைகள் பெற்றிருப்பவை. அதிலும் 70 பாடல்கள் [17.5%] சங்கப் பாடல்களைப் போல் கடவுள், தலைவன், தலைவி, போன்றோரை முன்வைத்துப் பாடப்பட்டவை. ஒரே மாதிரியான அமைப்புமுறை கையாளப்பட்டுள்ளதால் பல பாடல்கள் ஒரே நபரால் எழுதப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் இந்நூல் ஆராயப்பட்டுள்ளது.
உலகியலுக்குத் தேவையான அறக்கருத்துக்களை இந்நூல் கூறுகிறது. தனிமனிதனுக்கும், சமூகத்துக்கும் அற விழுமியங்களின் அவசியத்தைக் குறிப்பிட்ட தத்துவக் கொள்கையோடு நிற்காமல், பல தத்துவச் சிந்தனைகளை அடுக்குகளாக்கி, வாசகர்களை அகன்ற தத்துவப் பயணத்திற்குக் கொண்டு செல்கிறது. இனம், மொழி, மதம் போன்ற பிரிவினைகளை விடுத்து ஒழுக்கத்தைப் போற்றி மனிதத்தை வளர்க்க இந்த 400 பாடல்களில் கற்றுக் கொடுக்கிறது.
கட்டுரையாளர்: முனைவர் பட்ட ஆய்வாளர்