ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும் அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும் திறம்பட நடத்தி, சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட, இருளப்பன் ஜியைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…
அய்யனார் – லட்சுமி தம்பதியினருக்கு மகனாக, 1968 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் தேதி, சிவகாசியில் பிறந்தார் இருளப்பன் ஜி. அவருடன் பிறந்தவர்கள் ஒரு தம்பி மற்றும் மூன்று தங்கைகள். தந்தை அச்சுத்தொழில் செய்து வந்தார். தனது பள்ளிப் படிப்பை ஐந்தாம் வகுப்பு வரை முஸ்லிம் நகராட்சியில் பள்ளியில் படித்த பிறகு, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை சிவகாசி இந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். அதன் பிறகு, விலங்கியல் பாடத்தில் இளங்கலை (B.SC – Zoology) பட்டத்தை சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார்.
1982ல், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது விளையாட்டு மூலம் கவரப்பட்டு, தந்தை தீவிர திமுக அனுதாபியாக இருந்தாலும், தினமும் ஷாகா வரத் தொடங்கினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற மண்டைக்காடு கலவரம் ஹிந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தென் தமிழகத்தில் அதன் தாக்கம் தீவிரமான சூழலில், அன்றாடம் சிவகாசியில் நடக்கும் ஷாகா நின்றுபோனது. மீண்டும் தொடங்க முயற்சி எடுத்து நேதாஜி ஷாகாவின் முக்கிய சிக்ஷக்காக 1984ல் பொறுப்பேற்றார்.
கல்லூரி படிக்கும் போது, தேசப்பற்றுமிக்க என்.சி.சி.யில் ஆர்வத்துடன் கலந்து கொண்டதை கவனித்த அன்றைய மதுரை கோட்டத்தின் பிரச்சாரக் பாஸ்கர் ராவ் ஜி, இருளப்பன் ஜியை முழுநேர சங்கப்பணி செய்ய அழைத்தார். பின்னர் ஸ்தாணுமாலயன் ஜி, இல கணேசன் ஜிக்களின் தொடர் முயற்சியால், ராணுவப் பணிக்கு செல்ல விரும்பி பயிற்சி மேற்கொண்ட இருளப்பன் ஜி, கல்லூரிப்படிப்பு முடித்ததும் பிரச்சாரக் ஆனார்.
1988ல் அருப்புக்கோட்டையில் ஆரம்பித்து, 1990 −- 1993 வரை கோவில்பட்டி, 1993 −- 1995 வரை சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் உள்ளடக்கிய 5 தாலுகா, 1995 -− 2000 வரை மதுரை ஜில்லா என தொடர்ந்து 12 வருடங்கள் சங்கப் பிரச்சாரக்காக இருந்தார்.
பின்னர் காரைக்காலில் உள்ள விநாயக மிஷன் நிறுவனத்தில் சில மாதங்கள் வேலை செய்து, தனது தந்தை வழியிலேயே அச்சுத் தொழில் செய்தார். வழக்கறிஞராக விரும்பி, 2002ல் மதுரை சட்டக்கல்லூரியில் சேர்ந்தார். அதற்கான நுழைவுத்தேர்வில், மாநிலத்தில் 5வது இடம் பிடித்தார். சட்டப் பட்டம் பெற்ற பிறகு, 2005ல் ஜி.ஆர். சுவாமிநாதனிடம் சேர்ந்து வக்கீல் தொழில் பயிற்சி செய்தார். ஒரு பக்கம் வழக்கறிஞர் பணியுடன், சமூகப் பணியும் செய்ய விரும்பி 2003 முதல் சம்ஸ்கார் பாரதிக்கு மாநில பொதுச் செயலாளராக இருந்தார்.
மீண்டும் சங்கப் பணிக்கு திரும்பி, 2008 ஆம் ஆண்டில் மதுரை ஜில்லா சஹ கார்யவாஹ்காக இருந்தார். அதனைத் தொடர்ந்து, மதுரை கோட்டம் மக்கள் தொடர்பு பொறுப்பாளர் (சம்பர்க பிரமுக்), தென் தமிழகத்தின் சமுதாய நல்லிணக்கப் பொறுப்பாளர் (பிராந்த சாமாஜிக் சமரஸதா பிரமுக்) என சங்கத்தின் பல்வேறு பொறுப்புகளில் இருந்தார். 2017ல், மீண்டும் சம்ஸ்கார் பாரதியில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆனார். தற்போது அதன் மாநிலப் பொதுச் செயலாளராக உள்ளார்.
இருளப்பன் ஜி, சங்கப் பிரச்சாரக்காக இருந்தபோது கயத்தாறு, கழுகுமலை, ஸ்ரீவைகுண்டம் போன்ற பகுதிகளில் எல்லோருடைய வீட்டையும் தொடர்புக் கொண்டு, அனைவரது மத்தியிலும் சங்க அறிமுகத்தை கொண்டு சென்றார். இஸ்லாமியர்களை தாய் மதம் திருப்பினார்.
1998ல் மதுரையில் நடந்த கலவரத்தின் போது, சமூகத்தில் நிலவிய பதட்டமான சூழ்நிலையை சரிசெய்ய முயற்சி மேற்கொண்டார். மதுரையில் விளாச்சேரியில் ஒரு பகுதியை வேறு சமுதாயத்தினர் ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற போது, அதனைத் தடுத்ததுடன் ஹிந்துக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேல் வழிபாடு செய்து, அந்நிய ஆக்கிரமிப்பை தடுத்தார்.
தற்போது சம்ஸ்கார் பாரதியில் மாநில பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து, கிராமிய இசைக் கலைஞர்கள், சின்னத்திரை மற்றும் பெரிய திரை கலைஞர்களை சந்தித்து, ஒற்றுமை செய்யும் பணியை செய்து வருகின்றார். சங்க ஏற்பாடான வம்சி, ஷ்ருங்க வாத்தியங்கள் இசையில் நாதஸ்வரம் வாசிக்க பயிற்சி அளித்து, சிலர் வாசித்தும் வருகின்றனர்.
1988ல், சங்கத்தின் ஏழு நாள் பயிற்சியை முடித்த பிறகு, 1990ல் திருவேங்கடம் விவேகானந்தா கல்லூரியில் முதலாம் ஆண்டு பண்புப் பயிற்சி முகாமும், 1992ல் தெள்ளாரில் சுவாமி அபேதானந்தா பாலிடெக்னிக்கில் இரண்டாம் ஆண்டு பண்புப் பயிற்சி முகாமும், 1995ல் நாக்பூரில் மூன்றாம் ஆண்டு பண்புப் பயிற்சி முகாமையும் முடித்துள்ளார். பல வருடங்கள் சங்க சிக்ஷ வர்கவில் நியுத்த சிக்ஷக்காக இருந்துள்ளார்.
2002 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி பாண்டிச்செல்வி அம்மாளை திருமணம் செய்தார். அவர்களுக்கு பாரதி மீனா மற்றும் பூர்ண நிவேதிதா என்ற இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பாரதி மீனா சமிதி முகாமில் கலந்து கொண்டுள்ளார். இளைய மகள் பூரண நிவேதிதா மாணவர்கள் அமைப்பான ஏ.பி.வி.பி.யில் தென் தமிழகத்தின் செயற்குழு உறுப்பினராக உள்ளார்.
பன்னிரண்டு ஆண்டுகள் பிரச்சாரக்காக இருந்து சங்க வேலை செய்து, தற்போது வழக்கறிஞர் பணியுடன், சமூகப் பணியும் செய்து வரும் இருளப்பன் ஜி, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.