வாழ்த்துவோம் இந்த ஐந்து மாற்றங்களை!

சுவாமி விவேகானந்தர், மகரிஷி அரவிந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகிய வங்கம் தந்த ஆன்மிக தேசிய மும்மணிகளுக்கு ஆதரவு தந்து திருப்பம் தந்தது தமிழ் மண். சென்ற வாரம் வங்க மக்கள் கொடூரத்தின் பிடியில் இருந்து விடுபட்டு, குதூகலத்தின் பக்கம் திரும்பிய நல்ல காட்சி பார்க்கக் கிடைத்தது.
என்றுமே தேசியப் பயிருக்கு நாற்றங்கால் என்ற பெருமை கொள்வது தமிழகம். கடந்த ஐந்து ஆண்டுகளாக இதே மண்ணில் பிரிவினைவாதத்தை பல்வேறு கவர்ச்சிகரமான பொட்டலங்களாக பொது வெளியில் கடை பரப்பிய கட்சியின் தர்பாரை தீய சக்தி என்று உணர்ந்து, தமிழக வாக்காளர்கள் அதை வீட்டுக்கு அனுப்பி வைத்த தேசிய விழிப்புணர்வு மிக்க வரலாறு சென்ற வாரம் இங்கே நடந்தது. புதிய தமிழக அரசு அமையும் வேளையில், இந்த தலையங்கம் எழுதப்படுகிறது. தேசிய உணர்வு மிக்க தமிழகம் புதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்னென்ன என்று சென்ற வார தலையங்கம் பட்டியலிட்டது நினைவிருக்கும்.
மேற்குவங்கத்திலும், அஸ்ஸாமிலும், புதுச்சேரியிலும் அமைந்துள்ள புதிய அரசுகளுக்கு, இரட்டை என்ஜின் ஆட்சி என்று புகழ் பெற்றுள்ள மத்திய அரசுடனான இணக்கம் வாய்த்துள்ளது. அதன் நற்பயனை அறுவடை செய்யும் அரசியல் விவேகம் அந்த மூன்று மாநிலங்களையும் முன்னேற்றப் பாதையில், வளர்ச்சிப் பாதையில், தேசிய ஒருமைப்பாட்டு பாதையில் வீறு நடை போடச் செய்யும் என்பதில் ஐயமில்லை.
தமிழகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்ய முன் வரும் எந்த ஒரு அரசும், அதே பாதையை தேர்ந்தெடுத்தால் தமிழகம் சுபிட்சம் அடையும்; தேசம் மேலும் வளர்ச்சி அடையும். அந்த அரசியல் விவேகம் புதிய அரசுக்கு உள்ளதா என்பதை, எப்போதும் தேசியம் தழைக்கும் தமிழகம் கூர்ந்து கவனித்து வருகிறது என்பதுதான் இன்றைய நிலவரம்.
ஹிந்து விரோத, பிரிவினைவாத பாசறையிடம் இருந்து தமிழகம் விடுபட்ட அதே நேரத்தில் தேச விரோதத்தையும் அந்நிய விசுவாசத்தையும் ஊட்டி வளர்த்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாசறையிடம் இருந்து கடவுளின் சொந்த பூமியான கேரளம் விடுபட்டது தேசியத்துக்கு ஆரோக்கியம். அங்கே மாற்றாக அமைந்துள்ள புதிய அரசு முற்றிலும் தவறான ஒரு தேசிய தலைமையின் கீழ் இயங்கும் காங்கிரஸ் கட்சி வசம் செல்வது விழிப்பு மிக்க கேரள சகோதர -சகோதரிகளின் கண் முன் முளைத்துள்ள புதிய சவால். அடியோடு எதிர்மறை விமர்சன பரப்புரைக்கே பழகிப்போன அந்தக் கட்சி மக்களுக்கு நன்மை செய்யும் உருப்படியான போக்கை கடைபிடிக்க வேண்டும் என்பது முழு தேசத்தின் எதிர்பார்ப்பு.